மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

வெளிநாட்டு வேலையும், போலி முகவர்களும்!

வெளிநாட்டு வேலையும், போலி முகவர்களும்!

ஒரு தம்பி பேசினார். வயது 29. சொந்த ஊர் தஞ்சாவூர். சென்னைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.

எனது முகநூல் நண்பன் ஒருவன், உங்கள் முகநூல் பதிவுகளைப் பற்றிச் சொன்னார். அதன்பிறகு பார்க்கத் தொடங்கினேன். உங்களுடைய கனடா கட்டுரையை முழுமையாகப் படித்தேன். மிகச்சிறப்பாக வழிகாட்டி இருக்கின்றீர்கள்.

நானும் கனடா போக முயற்சித்தேன். திருச்சியில் ஒரு முகவர் மூலம் முயற்சித்தேன். 4 இலட்சம் ரூபாய் ஆகும் என வாங்கிக் கொண்டார். தற்காலிக விசாவில் என்னை, ஜார்ஜியா நாட்டுககு அனுப்பினார். நீ அங்கே போனதும் எங்கள் ஆள் வந்து அழைத்துச் செல்வார். அங்கிருந்து கனடா போகலாம் என்று சொன்னார். 5 பேர் குழுவாக எங்களை அனுப்பினார்.

ஆனால், சென்னை வான் ஊர்தி நிலையத்திலேயே எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

இது முதியவர்கள் செல்லும் விசா. இதை வைத்துக்கொண்டு நீங்கள் போக முடியாது. அப்படியே சென்றாலும், அந்த நாட்டில் உள்ளே விட மாட்டார்கள் என்று கூறி, எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார வைத்து விட்டார்கள். பின்னர் வெளியே விட்டார்கள்.

முகவரைச் சந்தித்து. பணத்தைத் திரும்பக் கேட்டோம். நான் பெங்களூருவில் உள்ள ஒரு முகவர் மூலமாகத்தான் அனுப்பினேன். பணத்தை அவருக்கு அனுப்பி விட்டேன். நீங்கள் அங்கே போய்க் கேளுங்கள் என்றார்.

அங்கே சென்று கேட்டோம். கிடைக்கவில்லை. மீண்டும் திருச்சி முகவருக்கு நெருக்கடி கொடுத்தோம். ஒரு ஆளுக்கு எனக்கு 80 ஆயிரம் கமிசன். அதை வேண்டுமானால் நான் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். அடுத்து அலைச்சல்தான். 3 பேருக்குத் திரும்பக் கொடுத்து விட்டான். அதையும் முறைகேடான வழியில்தான் கொடுத்தான். அதன்பிறகு அவன் வேறு ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டான்.

மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் குற்றச்சாட்டு கொடுத்தேன். நிறைய அலைந்தேன். பல ஆண்டுகள் ஆகியும், பணம் திரும்பக் கிடைக்கவில்லை. அது கடன் வாங்கிக் கொடுத்த பணம். 4 இலட்சம் கடன் உயர்ந்து பத்து இலட்சம் என்ற அளவிற்குச் சென்று விட்டது.

அதன்பிறகு, சென்னைக்கு வந்து ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். வட்டி கட்டிக்கொண்டு இருக்கின்றேன். வீட்டை வைத்து வாங்கிய கடன். அக்கா திருமணக் கடன் சேர்த்து, இன்னும் ஐந்தரை லட்சம் கொடுக்க வேண்டும். எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

என் மதுரை நண்பன் ஐஇஎல்டிஎஸ் தேர்வு எழுதி விட்டார். ஆனால், எனக்கு நேரம் கிடைக்கவில்லை. உங்களிடம் பேசிய அந்த கனடா தம்பி, தன்னுடைய 40 வயதில் கனடாவுக்கு உள்ளே போயிருக்கின்றேன். அதுபோல, எனக்கும் நம்பிக்கை இருக்கின்றது. முயற்சிக்க வேண்டும்.

ஆனால்,நாள்தோறும், சுங்குவார்சத்திரத்தில் இருந்து கவரப்பேட்டை 90 கிலோ மீட்டர் சென்று திரும்புகின்றேன். தேர்வுக்கு ஆயத்தம் செய்ய நேரம் இல்லை என்றார்.

அது நீங்கள் செய்கின்ற தவறு. எங்கே வேலை செய்கின்றீர்களோ, அதற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிக்க வேண்டும். மனம் தளராதீர்கள். வாய்ப்பு இருக்கின்றது- நீங்கள் கனடாவில் குடியேற வாழ்த்துகிறேன் என்றேன்.

மேற்கண்ட பதிவுக்கு ஓமன் அருண்குமார் தரும் விளக்கம்..

முறையான ஆவணங்கள் இல்லாமல் எந்த முகவரையும் நம்பாதீர்கள் சகோதரா...

நீங்கள் பட்டம் அல்லது டிப்ளமோ படித்துவிட்டு உங்கள் துறையில் குறைந்தது 3-5 ஆண்டு பயிற்சி பெற்று இருப்பின் சென்னையில் இருக்கும் Shiyali HR, premier Travels, Gheewala, Asia power, Jerry Vargees போன்ற முன்னணி முகவர்களை அனுகி உங்கள் அறிமுகக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்கள் அடங்கிய நகலை கொடுத்து விட்டு, உங்களுக்கு எந்தத் துறையில் வேலை தேவை என்பதையும் விவரித்து விட்டு வாருங்கள்.

இதுபோன்ற முன்னணி முகவர்கள் நம்மிடம் பதிவுக்கட்டணம் என்ற பெயரில் எந்தவித கட்டணமும் வாங்குவது இல்லை. அப்படியே எதுவும் கேட்டாலும் நீங்கள் முன் கூட்டியே பணம் கட்ட வேண்டாம்.

உங்கள் ‌ கல்வி தகுதிக்கும் பயிற்சிக்கும் ஏற்ற பணிக்கான ஆட்கள் தேவைப்படும் போது அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பார்கள்.

வளைகுடா நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள், நேரடியாக இங்கு வந்தோ, அல்லது இணைய வழி நேர்காணல் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமோ ஆட்களைத் தேர்ந்து எடுப்பார்கள்.

ஒருசில காலி இடங்களுக்கு நிறைய பேர் நேர்காணலுக்கு வருவார்கள். ஆனாலும் நீங்கள் தொடந்து முயற்சித்தால் உறுதியாக வாய்ப்பு கிடைக்கும். நேர்காணலில் நீங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டால், பணியில் சேருவது எளிது. உங்கள் ஒப்புதலை உறுதி செய்வது, மருத்துவ சோதனை, விசா ஆகியவற்றை அந்த முகவர்கள் பார்த்துக் கொள்வார்கள்,

ஆனால், நீங்கள் இசைவு தெரிவிக்கும் முன்பு அந்த நிறுவனத்தின் நிதி நிலை, ஊழியர்கள் இடையே அந்த நிறுவனத்திற்கு இருக்கும் மதிப்பு ஆகிய அடிப்படைத் தகவல்களை இணையம் மூலமாகவோ அல்லது ஏற்கனவே அந்த நாட்டில் பணிபுரிபவர்களின் மூலமாகவோ ஓரளவு கேட்டு அறிந்து கொள்வது நல்லது.

இதுபோன்ற பணிகளுக்கான கட்டணத்தை சில நேரங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் அந்தந்த நிறுவனங்களே செலுத்தி விடும் என்றாலும், சில சமயம் 30 முதல் 50 ஆயிரம் வரை முகவர்களுக்கு நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது வரும். அந்தக் கட்டணத்தை, நமக்கான பணி ஆணை, விசா, வான் ஊர்தி பயணச்சீட்டு ஆகிய அனைத்தும் நம் கையில் கிடைத்தபின் செலுத்தினால் போதுமானது.

வளைகுடா நாடுகளில் நீங்கள் குடி உரிமை பெற முடியாது எனினும், அங்கு கிடைக்கும் மாத ஊதியம் தற்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் சுமையைக் குறைந்த காலத்தில் எளிதாகத் தீர்க்க உதவும்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

சனி 21 நவ 2020