மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

போட்டி போட்டுக்கொண்டு உதவி: கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர்!

போட்டி போட்டுக்கொண்டு உதவி: கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் இந்த ஆண்டு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு  முறையைத் தமிழக அரசு கொண்டு வந்தது. இதில் 405 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் சேர்க்கை கட்டணம் கூட செலுத்த முடியாமல் உதவி கேட்டு வந்தனர். பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் இந்த மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ”மாணவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும்” என்று தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே  முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  “தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபின பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயின்ற ஏழை மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் சுமை ஏதும் ஏற்படா வண்ணம் இச்செலவினங்களை வழங்குவதற்காக, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவைப் பிறப்பித்துள்ளேன் என்று நவம்பர் 18ஆம் தேதி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் அறிவித்தேன்.

கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அறிவித்தேன்.

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, உதவித் தொகை அனுமதி வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்தும் விதமாகத் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க  உத்தரவிட்டுள்ளேன். அந்த நிதியிலிருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றைத் தமிழக அரசே நேரடியாகக் கல்லூரி நிர்வாகத்திற்குச் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் உதவி மாணவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் எனத் தெரிவித்த பின்பும், திமுக உதவுவதாகத் தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் அறிவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon