மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் -இன்ஜினியர் கைது: எச்சரிக்கும் போலீசார்!

இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் -இன்ஜினியர் கைது: எச்சரிக்கும் போலீசார்!

தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகமே உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மீதான சைபர் குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை என்று சென்னை போலீசார் எச்சரிக்கின்றனர்.

சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் 12 காவல் மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவுகள் துணை ஆணையாளர்கள் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த சூழலில், சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஒரு கல்லூரி மாணவியின் தந்தை தன்னுடைய மகளிடம் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட நபர் தன் மகளின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து, உடன் பயிலும் கல்லூரி மாணவிகளின் தொலைபேசி எண்களைக் கேட்டு மிரட்டி வருவதாக அடையாறு துணை ஆணையர் வி.விக்ரமனிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அடையாறு சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரான, தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்த அருண் கிறிஸ்டோபர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பிஇ ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இவர், இன்ஸ்டாகிராம் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேசி பழகியுள்ளார். காதலிப்பதாகக் கூறி நம்பிக்கையை வளர்த்துள்ளார். 2 மாத காலத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் அம்மாணவியின் அந்தரங்க புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை பெற்றுள்ளார் அருண் கிறிஸ்டோபர்.

இதை வைத்துக்கொண்டு மாணவியின் இன்ஸ்டா பக்கத்திலிருந்து அவரின் கல்லூரி தோழிகளுக்கு அநாகரீகமான வகையில் குறுந்தகவல்கள் அனுப்பி வலை வீசியதும் இதை வெளியில் சொன்னால் அம்மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து சில தோழிகள் அந்த கல்லூரி மாணவியின் தந்தையிடம் முறையிட்டுள்ளனர். கல்லூரி மாணவியின் தந்தைக்கு விஷயம் தெரியவர அவர் தனது மகளிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவரும் யாரென்று தெரியாத ஒரு நபர் தனது இன்ஸ்டாகிராம் ஐடியை ஹேக் செய்து, தனது மொபைலுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதாகவும் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது தந்தை போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அருண் கிறிஸ்டோபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப் மறறும் இரண்டு செல்போன்களை கைப்பற்றி ஆராய்ந்தனர். அப்போது கைது செய்யப்படுவதற்கு முன்னதாக தனது கேஜெட்களில் இருந்த பெண்களின் புகைப்படங்களை அவர் அழித்திருக்கிறார். ஆதாரமாக செல்போன்கள் மற்றும் கணினியில் எந்த புகைப்படங்களும் இல்லாததால் இந்த வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கூறியுள்ளார். எனினும் 'Easy Wallet என்ற Cloud Appல் மறைத்து வைத்திருந்த பலபெண்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இதுபோன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக யாரேனும் குற்றங்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். மேலும் பெண்கள் இதுபோன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை எனவும் தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை யாராக இருப்பினும் பகிரவேண்டாம் எனவும் அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன், கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய குற்றம் செய்பவர் பற்றித் தெரிவிக்க தன்னுடைய தனிப்பட்ட 87544-01111 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரியா

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon