மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

அரியர் தேர்வு விவகாரத்தில் விதிமீறல் இல்லை: தமிழக அரசு!

அரியர் தேர்வு விவகாரத்தில் விதிமீறல் இல்லை: தமிழக அரசு!

அரியர் ஆல் பாஸ் என்னும் அறிவிப்பில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கு நேற்று நடந்து கொண்டிருந்த போது, மாணவர்களும் லாகின் செய்து கலந்து கொண்டனர். இதனால் விசாரணையில் இடையூறு ஏற்பட்டதால் நீதிபதிகள் வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்தனர்.

இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக உயர்கல்வித் துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்யப் பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்த பின்னர் தான் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணானது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்தியக் கல்வி குழுமமும், விதிகளை மீறி அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த நிலையில் இவ்வாறு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

-பிரியா

சனி, 21 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon