மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 நவ 2020

மருத்துவ சீட் கிடைத்தும் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

மருத்துவ சீட் கிடைத்தும் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

மருத்துவக் கல்வியில் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு போராடி, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற வகையில் உள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 405 இடங்கள் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 86 இடங்களும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தாலும் அதிக கட்டணம் காரணமாகப் பல மாணவர்களால் சேர முடியவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை ஆண்டு கட்டணம் 11,000 ரூபாய் தான். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4.15 வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ.2.50 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர விடுதி கட்டணம் வேறு.

இந்த சூழலில் கட்டணத்தைச் செலுத்தினால் தான் சேர்க்கை என்று தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் நிர்ப்பந்திப்பதால், பல மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, "ஏழ்மை நிலையில் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் முன்வர வேண்டும். ஏழை மருத்துவ மாணவர் ஒருவரைத் தத்தெடுத்து அவர்களின் கட்டணத்தை ஏற்க வேண்டும்" என்று அறிவுறுத்தியது.

இந்த சூழலில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைப் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது கட்டணம் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தினால் அவர்களுக்கான சேர்க்கை அனுமதியை மறுக்கக்கூடாது. போஸ்ட் மெட்ரிக் என்ற கல்வி உதவித் தொகை மற்றும் பிற நிதி உதவிகள் அரசால் அறிவிக்கப்பட்ட படி சரியான முறையில் வழங்கப்படும். எனவே கட்டணத்தை காரணம்காட்டி சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் அழைத்து கல்லூரிகளில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களில் ஒருவரான தங்கவேல் கூறுகையில், "தனக்குக் கிடைத்த மருத்துவ இடத்தை உறுதி செய்வதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு நேற்று சென்றபோது, மாலைக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டனர். இதனால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த என் பெற்றோர்கள் ரூ.3.75 லட்சம் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கடன் வாங்க வேண்டி இருந்தது. இல்லையென்றால் மருத்துவ இடத்தை இழக்க நேரிடும் என்று பெற்றோர்கள் அஞ்சினர். எனக்கு மருத்துவ இடம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. அதேசமயம் மருத்துவராக வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க என் பெற்றோர்கள் கடனாளிகளாக மாறுவதைக் கண்டு எனக்கு வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கோவை வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி பி. பிஸ்டிஸ் பிரிஸ்கா, ஆண்டு கட்டணமான ரூ.6.5 லட்சத்தில் ரூ.4 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை பிரபாகரன் கூறுகையில், “இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து எங்களால் செலுத்த முடியும். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உதவி கிடைத்தால் மட்டுமே இந்த பணத்தை எங்களால் செலுத்த முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையிலிருந்து சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள 8 மாணவர்களில் ஒருவரான ஆர்.தீபிகாவின் தந்தை ரவிச்சந்திரன், நிதியுதவி கேட்டு ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்துள்ளார்.

ஆனால், “தற்போது பணம் செலுத்தாமல் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது. எனினும், அதன் பிறகு கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றாலும் எங்களுடைய அற்ப வருமானத்தைக் கொண்டு முழு கட்டணத்தையும் செலுத்த முடியாது. எனவே எங்களுக்கு அரசாங்கத்தின் உதவி அல்லது சில ஆதரவாளர்களின் உதவி தேவை” என்று கேட்டுக்கொண்டுள்ளார் ரவிச்சந்திரன்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ராம பிரசாதம் மற்றும் செல்வவிநாயக புரத்தைச் சேர்ந்த நிவேதா நிஸ்மிதா ஆகியோரும் கலந்தாய்வின் மூலம் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். எனினும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் இவர்கள் நேற்று முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து உதவி கேட்டு முறையிட்டுள்ளனர்.

தற்போது மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தலின் பேரில், கட்டணம் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடந்தாலும், அதன் பிறகு கட்டணத்தைச் செலுத்த மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இதனால் இடையில் அவர்கள் கல்வி பாதிக்கப்படும். விவசாயக் கூலி, கட்டுமான தொழில் எனச் சொற்ப வருமானத்துக்குச் செல்லும் பெற்றோர்களால், இந்த கட்டணத்தைச் செலுத்த முடியாது. தங்களது வருமானத்துக்கும் மீறி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர், தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்துள்ள ஏழை மருத்துவ மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

சனி 21 நவ 2020