முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்னாச்சு?

public

ஏழை எளிய மக்களும் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் . இந்தத் திட்டத்தை, ஆட்சி மாறினாலும் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அமல்படுத்தி வருகிறது அதிமுக அரசு.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஆண்டு தோறும் ரூ.517 கோடி நிதியைக் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வருகிறது தமிழக அரசு. இதனை சுமார் ஒரு கோடி குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் கடந்த ஏழு மாத காலமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பலன் பெறமுடியவில்லை என்று காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் சார்பில் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது நிறைந்த முதியவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 21ஆம் தேதி, புதுச்சத்திரம் கடை வீதிக்கு வந்தபோது பழைய காவல் நிலையம் எதிரில் விபத்தில் சிக்கினார்.

இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் கூறுகையில் , “அன்று, மதியம் 12 மணியளவில் சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அதனால் காலில் அடிபட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். அங்கு, டாக்டர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இங்கே ஆபரேஷன் செய்யமுடியாது, ஆபரேஷன் தியேட்டரும் செயல்படவில்லை என்று ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள டாக்டர்கள், ஆபரேஷன் உடனடியாக செய்யமுடியாது சீனியாரிட்டிப்படி தான் ஆபரேஷன் செய்வோம் என்று திரும்ப அனுப்பினார்கள். மீண்டும் இரவு 9.30 மணிக்குக் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டேன்” என்று கண்ணீருடன் கூறினார்.

அவரது மகன் ஆனந்தவேல் கூறுகையில், “கொரோனா டெஸ்ட், ரத்த பரிசோதனை என மொத்தம் 9 ஆயிரம் ரூபாய். ஆபரேஷன் செலவு, மாத்திரை மருந்து, பெட் வாடகை என ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கார்டு இருக்கிறது அதில் எதாவது கழிக்கமுடியுமா என்று கேட்டேன், அதற்கு கொரோனா வந்ததிலிருந்து முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் நிதி வருவதில்லை என்று தட்டிக்கழித்தார்கள்” என்றார்.

இதுகுறித்து நாம் சில தனியார் மருத்துவமனைகளில் விசாரித்தோம், “அந்தத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு பலன் இல்லை. அரசு மருத்துவமனைகளுக்குத்தான் நல்ல பலன். பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அந்த திட்டத்தை எடுத்துவிட்டார்கள். திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளில் இருந்து காப்பீட்டு திட்ட அதிகாரிக்கு சிகிச்சை பெற்றதற்கான பில்லை அனுப்பினால் அதற்கு எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. ஒரு வேலை ப்ரீமியம் செலுத்த அரசு தவறிவிட்டதா என்பதும் தெரிவியவில்லை” என்கின்றனர்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைப் பற்றிக் கேட்டோம்.

“முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில்தான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். நீங்கள் சொல்லும் தகவல்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

**எம்.பி.காசி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *