eநாளை முதல் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை!

public

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக வெங்காயம் அழுகுவதாலும், உற்பத்தி குறைவாலும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

அதோடு தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. திருச்சியைப் பொருத்தவரை வெங்காயம் மண்டிக்குத் தினசரி பெரிய வெங்காயம் 300 டன் அளவுக்கு விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 200 டன் மட்டுமே விற்பனைக்கு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்னும் பத்து தினங்களில் வெங்காயத்தின் விலை ரூ.120 வரை அதிகரிக்கும் என்று மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களால் காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெங்காயத்தைக் கொள்முதல் செய்து பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, இன்று காலை மதுரையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வெங்காய விலை மற்றும் விற்பனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பசுமை பண்ணை கடைகள் மூலம் நாளை முதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெங்காய விலை உயர்ந்த போது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதிக்குத் தடை செய்யப்பட்டது. அதுபோன்று தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெங்காயம் விலை உயர்வு தொடங்கும் கால கட்டத்திலேயே தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

**பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *