மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

எழுதியவர்கள் 3,536, தேர்ச்சியோ 88,889: நீட்டில் நடந்த குளறுபடி!

எழுதியவர்கள்  3,536, தேர்ச்சியோ 88,889: நீட்டில் நடந்த குளறுபடி!வெற்றிநடை போடும் தமிழகம்

நீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து, புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. 13,66,945 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இதில் 7,71,500 பேர் அதாவது 56.44 சதவிகிதத்தினர் தேர்ச்சி அடைந்தனர். இதனிடையே, மாநிலம் வாரியாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. 2019 மற்றும் 2020 ஆண்டு புள்ளிவிவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் திரிபுரா, உத்தரகாண்ட், தெலங்கானா மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதும் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து காட்டப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையாக மாறியது. திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 3,536 என்ற நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

உத்தராகண்ட் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 12,047 தான். ஆனால், அங்கு 37,301 தேர்ச்சி பெற்றதாகவும் புள்ளிவிவரம் தெரிவித்தது. மேலும், தெலுங்கானாவில் நீட் தேர்வு எழுதியவர்கள் 50,392, தேர்ச்சி பெற்றவர்கள் 1738 பேர்தான். ஆனால் தேர்ச்சி விகிதம் 49.15% என குறிப்பிடப்பட்டது. உத்தர பிரதேசத்தில் தேர்வு எழுதிய 1.50 லட்சம் பேரில் 7323 பேர்தான் தேர்ச்சி பெற்றதாகவும் ஆனால் தேர்ச்சி சதவிகிதம் 60.79 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி திரிபுராவில் தேர்வு எழுதிய 3,536 பேரில் 1738 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், தெலங்கானாவில் தேர்வெழுதிய 50,392 பேர் 28,093 தேர்ச்சி பெற்றுள்ளதால் 49.15 சதவிகிதம் அளிக்கப்பட்டதும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,321 பேர் வெற்றிபெற்றதும் தெரியவந்தது. அதாவது, பழைய பட்டியலில் ஒரு மாநிலத்தின் புள்ளிவிவரங்கள் மற்றொரு மாநிலத்தின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

எழில்

ஞாயிறு, 18 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon