மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

கிராமப்புற அரசுப்பள்ளி மாணவிகள்: முதல் முயற்சியிலேயே வெற்றி!

கிராமப்புற அரசுப்பள்ளி மாணவிகள்: முதல் முயற்சியிலேயே வெற்றி!

கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டு பேர், எந்த சிறப்புப் பயிற்சியும் இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் முதல் முறையாக, 720/720 மதிப்பெண்கள் பெற்று டெல்லி, ஒடிசாவைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்தனர். தமிழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீஜன், 710  மதிப்பெண்கள் பெற்றார். தேனியைச் சேர்ந்த ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த இரு மாணவிகள் நீட் தேர்வுக்காக எந்த சிறப்புப் பயிற்சியும் எடுக்காமல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடைக்கு அருகிலுள்ள வெல்லியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவிகள், எஸ். ரம்யா மற்றும் பி. பிஸ்டிஸ் பிரிஸ்கா. இருவரும் எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திலோ அல்லது  எந்தவொரு சிறப்பு வகுப்புக்கோ செல்லாமல் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ரம்யா மற்றும் பிரிஸ்கா முறையே, 145 மற்றும் 167 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எஸ்சி/எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான  தகுதி மதிப்பெண்கள் 113 - 146 ஆகும்.

“நான் எந்தவொரு தனியார் பயிற்சி மையத்துக்கும் சென்று படிக்கவில்லை. 11,12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை வைத்தே தேர்வுக்குத் தயாரானேன்” என தினசரி கூலித் தொழிலாளியின் மகளான ரம்யா தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் பள்ளிக் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆன்லைன் பயிற்சியிலும் கலந்துகொள்ள முடியவில்லை என கூறும் ரம்யா,  கோவிட் 19 காரணமாக, சந்தேகங்களைத்   தெளிவுபடுத்துவதற்காகக் கூட ஆசிரியர்கள் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றது ஒரு சாதனை என  கூறும் பிஸ்டிஸ், “நீட் தேர்வுக்காக 11, 12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களைக் கொண்டே  தயாரானேன். உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று நாட்கள்  ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொண்டு படித்தேன்” என்று தெரிவித்துள்ளார். இருவரும், இருதயநோய் நிபுணர்களாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்குப் பள்ளியில் உயிரியல் பாடம் எடுத்த வசந்தமணி கூறுகையில், “எங்கள் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினர். அரசால் வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளைக் கொண்டு தேர்வெழுதி  பயிற்சி மேற்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பெல்லி, “மாணவிகளுக்குக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்குப் பள்ளி சார்பில் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில், தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களில் 1,615 போ் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் , கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி  720க்கு 580 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் : நன்றி, தி இந்து

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 18 அக் 2020