மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 24 நவ 2020

உலக பட்டினிக் குறியீடு: தீவிர பசிப் பிரிவில் இந்தியா!

உலக பட்டினிக் குறியீடு: தீவிர பசிப் பிரிவில் இந்தியா!

ஒவ்வோர் ஆண்டும் குளோபல் ஹங்கர் இண்டக்ஸ் எனப்படும் உலக பட்டினிக் குறியீடு தர வரிசை வெளியிடப்பட்டு வருகிறது. நான்கு அளவுகோல்களில் ஆய்வு நடத்தப்பட்டு இது வெளியிடப்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் இடம்பெற்றுள்ள 107 நாடுகளில் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, இது தீவிரமான பசி என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வறுமையை ஒழிப்பதிலான மோசமான செயல்முறைகள், முறையான கண்காணிப்பு இல்லாதது ஆகியவையும், ஊட்டச்சத்து குறைபாட்டை கையாள்வதிலான பெரிய மாநிலங்களின் மோசமான அணுகுமுறையும்தான் தர வரிசையில் இந்தியா பின்னடைவைச் சந்திக்கக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு இந்த தர வரிசையில் இடம்பெற்றிருந்த 117 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்தில் இருந்தது.

அண்டை நாடான வங்கதேசம், மியான்மர் மற்றும் பாகிஸ்தானும் தீவிரமான பசி பிரிவில் உள்ளன, வங்கதேசம் 75ஆவது இடத்திலும், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் 78 மற்றும் 88ஆவது இடத்திலும் உள்ளன. 73ஆவது இடத்தில் நேபாளமும், 64ஆவது இடத்தில் உள்ள இலங்கையும் மிதமான பசி பிரிவில் உள்ளன. அண்டை நாடுகள் அனைத்தையும் விட மோசமான 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.

இந்திய மக்கள்தொகையில் 14 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.7 சதவிகிதமாக இருக்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்குத் தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.

“உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களால் தேசிய சராசரி நிறைய பாதிக்கப்படுகிறது. உண்மையில் அதிக அளவு ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்ட மாநிலங்கள் அவை. அங்குதான் மக்கள்தொகையும் அதிகமாக இருக்கிறது” என்ற டெல்லி சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன், இந்தியாவின் தர வரிசையில் ஒட்டுமொத்த மாற்றத்தைக் காண உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

இதுதொடர்பாக வெளிவந்த செய்தியை நேற்று (அக்டோபர் 17) பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் ஏழைகள் பசியுடன் உள்ளனர், ஏனெனில் அரசாங்கம் அதன் சில சிறப்பு 'நண்பர்களின்' பைகளை நிரப்புகிறது” என்று மத்திய அரசை கடுமையாக சாடினார்.

எழில்

ஞாயிறு, 18 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon