மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

ஆளுநர் முடிவு... மருத்துவ கலந்தாய்வு எப்போது? விஜயபாஸ்கர் பதில்!

ஆளுநர் முடிவு... மருத்துவ கலந்தாய்வு எப்போது? விஜயபாஸ்கர் பதில்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான, மசோதா ஆளுநர் பரிசீலனையில் இருக்கிறது. எனவே ஆளுநரின் முடிவு வரும் வரை, மருத்துவ கலந்தாய்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படமாட்டாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

இதையடுத்து, ஏழை மாணவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 17) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். ஆளுநரின் முடிவு வந்த பிறகுதான் கலந்தாய்வு குறித்து முடிவெடுப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம். இதில் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. கால அவகாசம் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். எனவே ஆளுநரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போன்று மருத்துவ படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நிச்சயமாகத் தமிழக அரசு பெற்றுத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon