மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

நீட் : தமிழகத்தில் தேர்வான மாணவர்கள் குறைவு!

நீட் : தமிழகத்தில் தேர்வான மாணவர்கள் குறைவு!

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்றாலும், தேர்வான மாணவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020ல் குறைவு என்பதைத் தேசிய தேர்வு முகமை தரவுகள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் 13,66,945 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இதில் 7,71,500 பேர் அதாவது 56.44 சதவிகிதத்தினர் தேர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 8.87 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

ஆனால் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. 2019ல், 1,38,997 விண்ணப்பித்தனர். இதில், 1,23,078 தேர்வை எழுதினர். தேர்வை எழுதியவர்களில், 59,785 பேர் அதாவது 48.57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் 2020ஐ பொறுத்தவரை, 1,21,617 பேர் தான் விண்ணப்பித்துள்ளனர். இதில், 99,610 தேர்வை எழுதினர். இதில், 57,215 பேர் அதாவது 57.44சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நீட் தேர்வை விட இந்த ஆண்டு 2,570 பேர் குறைவாகவே வெற்றி பெற்றுள்ளனர். குறைந்த அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதனடிப்படையில் மதிப்பிடப்பட்டதால் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “2019ஐ காட்டிலும், 2020ல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறைவு என்பது, நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு - குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தேர்வு என்பது இந்த ஆண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதைத் தாங்க முடியாமல், நேற்றைய தினம் நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனே கண்கலங்கியிருக்கிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வாகும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசியத் தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon