மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 23 அக் 2020

நீட் முடிவு: தமிழகத்தில் திருப்பூர் மாணவர் முதலிடம், அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

நீட் முடிவு: தமிழகத்தில் திருப்பூர் மாணவர் முதலிடம், அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

2020ஆம் ஆண்டின் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வெள்ளம், கொரோனா பரவல், போக்குவரத்து வசதியின்மை என பல்வேறு காரணங்களைக் காட்டி, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் ஏற்கனவே இரு முறை தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

நாடு முழுவதும் 80,005 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்காக 52,720 இடங்கள், 525 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் இடங்கள் உள்ளன. இதற்காக,தமிழகத்தில் 1,17,990 பேர் உட்பட நாடு முழுவதும் 15,97,433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 13,66,945 பேர் தேர்வு எழுதினார்கள். மேலும், கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.

இந்த இரு தேர்வுகளுக்குமான முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருந்தார். நேற்று 2 மணி முதல் 5 மணிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

முன்னதாக, https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதள பக்கத்தில் விடைகள் தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று மாலை தேர்வு முடிவைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 7,71,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.44 சதவிகிதமாகும். நீட் தேர்வில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44ஆக உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களில் 48.57% பேர் தேர்ச்சி பெற்றனர். 2019ஐ காட்டிலும் இந்த ஆண்டு 8.87 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் என்ற மாணவர் 710/720 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பை முடித்த இவர், அந்த ஆண்டே நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இந்நிலையில் விடா முயற்சியுடன் படித்த ஸ்ரீஜன், இந்த ஆண்டு 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவரைத் தவிர நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் பிரபா ரவிச்சந்திரன், 705 மதிப்பெண்களும், நாமக்கல்லைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா 701 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்கள் நாமக்கல்லில் உள்ள க்ரீன் பார்க் பள்ளியில் நீட் பயிற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்

இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவித்குமார். இவரது மதிப்பெண்கள் 664. இவர் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி. 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய இவர் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர், அரசுப் பள்ளி மாணவர்களால் முடியாது என எதுவும் இல்லை என்று சக மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

720/720 பெற்று சாதனை

அகில இந்திய அளவில் மொத்தம் 720/720 மதிப்பெண்கள் எடுத்து ஒடிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்ற மாணவரும், டெல்லியைச் சேர்ந்த அகன்ஷா சிங் என்ற மாணவியும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதன்முறை.

2018

2018ஆம் ஆண்டை பொறுத்தவரை நீட் தேர்வை எழுத நாடு முழுவதும், 13,26,725 (ஆண்- 5,80,160, பெண்- 7,46,075) பேர் விண்ணப்பித்திருந்தனர். 12,69,922 பேர் தேர்வை எழுதினர். இதில், 7,14,562 பேர் அதாவது 56.27 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், ராஜஸ்தான் -74.3%, டெல்லி- 73.73%, ஹரியானா- 72.59%, ஆந்திரா- 72.55%, சண்டிகர்- 71.81% ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களை பிடித்தன. இதில், கடைசி 5 இடங்களில், தமிழகம்- 39.56% மற்றும் புதுச்சேரி-39.62% மாநிலங்கள் பிடித்தன.

2019

2019ஆம் ஆண்டை பொறுத்தவரை நாடு முழுவதும், 15,19,375 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 14,10,755 பேர் தேர்வு எழுதினர். 7,97,042 பேர், அதாவது 56.50 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் டெல்லி-74.92% ஹரியானா-73.41% சண்டிகர்- 73.24%, ஆந்திரா- 70.72%, ராஜஸ்தான் - 69.66% ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களை பிடித்தன. 2018ஆம் ஆண்டைக் காட்டிலும், 2019ல் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் 9.01 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் வரவில்லை. தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 2019ல்-48.57%ஆக உள்ளது. புதுச்சேரியில், 48.70%ஆக உள்ளது

தமிழக அளவில் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 57ஆவது இடத்தையும் பெற்றார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கே.கே.கார்வண்ணபிரபு 572 மதிப்பெண் பெற்று ஐந்தாவது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவி

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon