மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

இயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்!

இயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்!வெற்றிநடை போடும் தமிழகம்

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான பாடகர் எஸ்பிபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் நேற்று மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். காலத்தால் அழிக்க முடியாத 40 ஆயிரம் பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர் இன்று கண்ணாடி பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருப்பதை காண்பதற்கு இதயம் கனக்கத்தான் செய்தது.

எஸ்பிபி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் எனக் கூறி ஒட்டுமொத்த திரையுலகமுமே இரங்கல் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் பாடகர் மனோ, இயக்குநர் அமீர் ஆகியோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோ

பாடகர் மனோ கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் எஸ்பிபியின் உடலைப் பார்த்துத் தேம்பி அழும் காட்சி மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுபோன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசின் சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே இன்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 10 மணியளவில், எஸ்.பி.பி. உடலுக்குப் புரோகிதர்களின் வேத மந்திரங்களுடன் இறுதிச்சடங்குகள் தொடங்கின. அதன்பின் மகன் எஸ்பிபி சரண் இறுதிச் சடங்கைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் இறுதிச்சடங்கு செய்தனர்.

இறுதிச் சடங்கு நிகழ்வுக்காகத் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தலைமையில் 500 போலீசார் தாமரைப்பாக்கம் பண்ணை வீடு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மறுபக்கம் அரசு மரியாதை கொடுப்பதற்காகத் தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு வந்தனர்.

எஸ்பிபி காலை தொட்டு வணங்கிய விஜய்

இதனிடையே வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ‘பத்ம பூஷன் எஸ்பிபி ஐயா புகழ் ஓங்குக’ என்ற வாசகத்துடன் எஸ்பிபியின் உடலைத் தூக்கிச் செல்ல, அவரது உடலுக்கு முன்பாக ஆயுதப்படை போலீசார் அணி வகுத்தனர். அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்த நடிகர் விஜய், சரணுக்கு தோள்தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். எஸ்பிபியின் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், 24 காவலர்கள், 3 முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. அடக்கம் செய்யப்படும் இடத்திலும் மந்திரங்கள் பாடி குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 12.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், பிரபலங்கள், ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் காற்றில் கலந்தது கானக்குரல். பாட்டுடை தலைவனுக்குப் பிரியா விடை அளிக்கப்பட்டது.

-கவிபிரியா

சனி, 26 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon