மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

குரல் அரசன் எஸ்பிபி காலமானார்!

குரல் அரசன் எஸ்பிபி காலமானார்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74) இன்று பிற்பகல் 1.04 மணிக்குக் காலமானதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபியின் உடல்நிலை நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து திரைபிரபலங்கள் எல்லாம் மருத்துவமனைக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். நேற்று இரவு 8 மணிக்குச் சென்ற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், எஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது என கவலையுடன் தெரிவித்திருந்தார்.

இன்று காலை இயக்குநர் பாரதிராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் எம்ஜிஎம் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார் என்று வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு முன்பு எஸ்பிபி மகன் அளித்த பேட்டியில், எம்ஜிஎம் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவின் பாடல்கள் இருக்கிற வரைக்கும் அவர் பெயர் இருக்கும், நீங்கள் எல்லோரும் இருக்கிற வரைக்கும் அப்பா எங்களுடன் இருப்பார். எல்லோருக்கும் நன்றி.. மற்ற தகவல்களை ஒரு மணி நேரத்தில் தெரிவிக்கிறேன் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

எஸ்பிபி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்ததாக இன்று காலை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. எஸ்பிபி மிகப் பெரிய பாடகன், உலகமகா கலைஞன் என்பதையும் தாண்டி என்னுடைய 50 வருட கால நண்பன். என்னால் இந்தத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளத் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லோரும் பிரார்த்தனை செய்தோம், எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் பலனளிக்கவில்லை. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அவரைப் போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை. இருவரும் ஒருவருக்கொருவர் வாடா போடா என அழைத்துக்கொள்வோம். வருத்தத்தில் என்னால் பேச முடியவில்லை என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

அதுபோன்று இனி பாடல்கள் மூலம் எஸ்பிபி நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-கவிபிரியா

வெள்ளி, 25 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon