தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: ரங்கராஜன் குழு அறிக்கை!

public

தமிழக பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதாக சி.ரங்கராஜன் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் விவசாயம், தொழில், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் குழு மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு இன்று (செப்டம்பர் 21) சென்ற சி.ரங்கராஜன் மற்றும் குழுவைச் சேர்ந்தவர்கள், முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், “கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. ஊரடங்கிலிருந்து விடுபட்டால் மட்டுமே வளர்ச்சி அதிகமாகும். கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு ஊரடங்கைத் தவிர்த்து மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நோக்கில் பார்த்தால் எவ்வளவு சீக்கிரம் ஊரடங்கில் இருந்து விடுபடுகிறோமோ அவ்வளவு நல்லது” என்று தெரிவித்தார்.

2020-21 நிதியாண்டில் என்ன வளர்ச்சி இருக்கும் என்பதை தாங்கள் கணித்துள்ளதாக தெரிவித்த ரங்கராஜன், “ஒரு கணக்கின்படி பார்த்தால் வளர்ச்சி என்பது 1.71 சதவிகிதமாக இருக்கும். இன்னொரு கணக்கின்படி பார்த்தால் சிறிது சரிவு இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விற்பனை, மின்சார உபயோகத்தைப் பார்க்கும்போது கொரோனாவிற்கு முன்பிருந்த நிலைக்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் பழைய நிலை திரும்பலாம் என தோன்றுகிறது. இந்த ஆண்டில் வரியை உயர்த்துவதற்கு எந்த வழியும் கிடையாது, வரியை குறையுங்கள் என்றுதான் பலரும் கேட்கிறார்கள். ஆக, இந்த கேள்வியை எதிர்காலத்தில்தான் எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.

மேலும், “எங்களது பரிந்துரையை இரண்டு பிரிவுகளாக அளித்துள்ளோம். நவம்பர் மாதம் வரை உயர்த்தி வழங்கப்படும் அரிசியை, மேலும் சில மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இருக்கிறது. அதேபோல நகர்புறங்களிலும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளோம்.

கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கத்தான் செய்யும். ஏனெனில், வருமானம் குறைந்துவிட்டது. மருந்து உள்ளிட்ட சுகாதார செலவுகள் அதிகமாகிவிட்டன. சுகாதார செலவுகளுக்கு எங்களது கணக்கின்படி இன்னும் 5,000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்” என்று ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *