�அதிகாரிகளுக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடக்கிறதா?: நீதிபதிகள் கேள்வி!

public

தமிழகத்தில், காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் கடத்தல் நடப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் வழக்குகளில் கைதாகும் ஓட்டுநர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று (செப்டம்பர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி. தரப்பில் இவ்வழக்குத் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், தமிழகத்தில் மணல் கடத்தல் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது. வலிமை இழந்தோர் மீது வழக்குகளைப் பதிவு செய்து, அவர்களை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்தனர்.

ஒரு காவல் நிலைய அதிகார எல்லைக்குள் மணல் கடத்தப்படுகிறது என்றால் அங்கு பணியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்குமா? வருவாய் துறையில் உள்ள வட்டார வருவாய் அதிகாரிகள், தாசில்தார் ஆகியோருக்கும் மணல் கடத்தப்படுவது தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த அதிகாரிகள் எல்லாம் மணல் கடத்தப்படுவதைத் தெரிந்தும் தடுக்காமல் உள்ளனர் என்று குறிப்பிட்டனர்.

எனவே, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது? அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தால் தான் மணல் கடத்தலைத் தடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், போலீஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு எதிராக எத்தனை மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பிரதாப் குமாருக்கு உத்தரவிட்டனர்.

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மணல் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் இதே கருத்தை முன்வைத்தது. அதாவது, மணல் கடத்தலைத் தடுக்க எத்தனை உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் அதனை அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை. மணல் கடத்தல் என்பது காவல்துறையினருக்குத் தெரியாமல் நடப்பது கிடையாது என்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று நெல்லையில், மணல் கடத்தலுக்கு உதவியதாகக் கூறி மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் லட்சுமி நாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *