மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 ஜன 2021

அரியர் தேர்ச்சி வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

அரியர் தேர்ச்சி வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!வெற்றிநடை போடும் தமிழகம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரியர் தேர்வு ரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதற்கு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் ஏஐசிடிஇ தலைவர் இருவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, கலை அறிவியல் பொறியியல் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றைக் காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அனைத்து பாடங்களையும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடையச் செய்யும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தைத் தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளதாகவும், 25 சதவிகித மதிப்பெண்ணுக்கு கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தேர்வுகளில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மனத் திருப்தியும் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும்.

தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறு. எனவே அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு செப்டம்பர் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு யுஜிசி விதிகளுக்கு முரணாகச் செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (செப்டம்பர் 16) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாலகுருசாமி வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைச் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்குடன் இணைத்துப் பட்டியலிடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

-கவிபிரியா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon