மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ரஷ்யாவின் கொரோனா மருந்தை வாங்கும் இந்திய நிறுவனம் !

ரஷ்யாவின் கொரோனா மருந்தை வாங்கும் இந்திய நிறுவனம் !

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி அனைத்து பரிசோதனையிலும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், விரைவில் சந்தைக்கு வரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

அதேசமயத்தில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்ட வேகம் குறித்து உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் கவலையை வெளிப்படுத்தினர். ரஷ்ய மருந்தின் பாதுகாப்பு குறித்து, உலக சுகாதார அமைப்பு தங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.

ஆனால் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டதாகவும். தனது மகள்களில் ஒருவருக்குக் கூட அந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும் அதிபர் விளாடிமர் புதின் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம்(ஆர்.டி.ஐ.எஃப்), கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி இந்திய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் 300 மில்லியன் டோஸ் மருந்துகளைத் தயாரிக்கவும், இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இருப்பதாகவும், இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல் நிலுவையில் இருப்பதாகவும் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனையை நடத்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் அறிக்கை குறித்து ரெட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.வி. பிரசாத் கூறுகையில், “இந்தியாவில் COVID-19க்கு எதிரான போராட்டத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நம்பகமான கருவியாக இருக்கும். தடுப்பூசியின் விலை குறித்து எந்த விவரமும் இல்லை, ஆனால் ஆர்.டி.ஐ.எஃப் முன்பு கூறியது போல இதை லாபத்தை ஈட்டும் நோக்கத்தில் கண்டுபிடிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின்னர் மனித ஆய்வு மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஸ்புட்னிக் வி பரிசோதனைக்காக, கஜகஸ்தான், பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஆர்.டி.ஐ.எஃப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon