மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கி.ராவுக்கு ஞானபீடம்: 99 ஆவது பிறந்தநாள் கோரிக்கை!

 கி.ராவுக்கு ஞானபீடம்:   99 ஆவது பிறந்தநாள் கோரிக்கை!

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற கி.ரா.வுக்கு இன்று (செப்டம்பர் 16) 98 வயது நிறைந்து 99 ஆவது பிறந்தநாள்.

நூற்றாண்டைத் தொட்டுக் கொண்டிருக்கும் கிராவுக்கு சமூக தளங்களில் வாசகர்கள் வாழ்த்து மழைகளை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்த்து மழைக்கிடையே ஒரு செயல் திட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறார் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்.

”தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ஞானபீட விருது கொடுக்குமாறு ஞானபீடம் அமைப்பிற்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் இது” என தான் அனுப்பிய மின்னஞ்சலைப் பதிவிட்டு, “ உலகத் தமிழ் எழுத்தாளர்களே நீங்கள் ஒவ்வொருவரும் பாரதீய ஞானபீடம் அமைப்பிற்கு எனது மின்னஞ்சல் போல் ஒரு மின்னஞ்சலை [email protected] அனுப்புங்கள். 98 வயதை இன்று தன் பிறந்தநாளில் கொண்டாடும் நூற்றாண்டு கொண்டாடப் போகும் தமிழ் எழுத்தாளரைக் கௌரவிப்போம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எழுத்தாளரும், கிராவின் உற்ற நண்பரும் அரசியல் பிரமுகருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது பதிவில்,

“கி.ரா. 98வயதை எட்டியுள்ளார். முதுமையை விரட்டும் அபார நினைவாற்றல். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அப்படியே சொல்வார். இன்றைக்கும் எவர் துணையும் இன்றி எழுத்துக்களை தானே வெள்ளைத் தாளில் பேனா கொண்டு அற்புதமாக எழுதுகிறார்.

எப்போது சந்தித்தாலும் இரண்டு மணி நேரம்கூட விவாதிப்பார். முதுமை என்ற நிலை இல்லாமல் என்றும் இனிமையாக வளமாக எல்லோரும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவரது ஆலோசனைகள் இருக்கும்.

தற்போது அவருக்கு 98 வயது. அவர் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இலக்கிய உலகை ஆளவேண்டும் என்று விரும்புகிறோம்.

ஞானபீடம் கி.ராவுக்கு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. கி.ராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. எல்லாரும் எதிர்பார்த்த ஞானபீடம் தமிழுக்கு கிடைக்கவில்லை என்று அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது.

ஞானபீட விருது 1965ல் இருந்து ஜெயின் ட்ரஸ்ட் என்ற தனியார் அமைப்பு இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியப்படைப்புகளில் ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் உள்ள சிறந்த படைப்பாளிக்கு விருதினை வழங்கி வருகிறது.

வங்கமொழிக்கு 6 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாள மொழிக்கு 5 முறையும், தெலுங்கிற்கு 3 முறைக்கு மேலும் ஞானபீட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 14 ஆண்டுகளில்,தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஒரு முறைகூட வழங்காமல் ஞானபீடம் புறக்கணித்து விட்டது. தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இந்த ஆண்டும் வழங்காமல் வங்க மொழி கவிஞர் ஷங்கா கோஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் படைப்பாளிகளான அகிலன், ஜெயகாந்தனுக்கு பிறகு தமிழ் இலக்கியத்திற்கு ஞானபீடம் கிடைக்கவில்லை. நா.பார்த்தசாரதிக்கு 1987ல் கிடைத்திருக்க வேண்டிய ஞானபீட விருதும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் தவறிவிட்டது. ஏனெனில் ஞானபீட விருது மறைந்தவர்களுக்கு கொடுப்பதில்லை.

விருதுகள் பெறுபவர்களால் பெருமைப்படும். தவிர விருதுகள் என்றுமே படைப்பாளிகளுக்கு பெருமை சேர்ப்பது அல்ல. தனிப்பட்ட முறையில் கி.ராவுக்கு ஞானபீட விருது வழங்காதது ஞானபீட விருதின் நோக்கத்தையும் அதன் பெருமைகளையும் பாழ்படுத்திவிட்டது. கி.ரா போன்ற இலக்கிய ஆளுமைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஞானபீடம் என்ன நோபல் பரிசுக்கே கிரா பரிந்துரைக்கப்படலாம். அதற்கும் காலம் வரும்”என்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார் கே.எஸ்.ஆர்.

வேந்தன்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon