வரதட்சணை கொடுமைக்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகளாக உயரவுள்ளது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன் தினம் கூடியது. இறுதி நாளான இன்று ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
இந்த நிலையில் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 16) உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் மூலம் ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“தவறான நோக்குடன் பெண்களை பின் தொடர்ந்தால், இரண்டாவது முறையும் தொடர்ந்து குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தவும், பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்டவர்களை விற்பனை செய்வது, விலைக்கு வாங்குவது போன்ற குற்றங்களுக்கு தற்போது அதிகபட்சமாக வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனைக்குப் பதிலாக குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றும் முதல்வர் அறிவித்தார்.
மற்றொரு அறிவிப்பில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அது நடப்பு ஆண்டிலேயே செயல்படத் துவங்கும் என்றும் கூறினார்.
எழில்