மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கோவை: யானை தாக்கி மூதாட்டி பலி!

கோவை: யானை தாக்கி மூதாட்டி பலி!

கோவை வனப்பகுதியிலிருந்து விலங்குகள், குறிப்பாக யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைத் தாக்குவதும், அதனால் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமீப நாட்களாக யானை நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே தூங்க வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 15) காலை கோவையில் யானை தாக்கி 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாப்பநாயக்கன்பாளையம் அருகே பன்னிமடையைச் சேர்ந்தவர் நீலாவதி (70). நேற்று காலை கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். செல்லும் வழியில் ஒற்றை யானை தாக்கி உயிரிழந்துள்ளார். அப்பகுதியே சென்ற மக்கள் மூதாட்டி இறந்து கிடந்ததைக் கண்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோயம்புத்தூர் வனப்பகுதியின் அருகிலுள்ள ரிசர்வ் வனப்பகுதியிலிருந்து அந்த கிராமத்திற்குள் யானை வழி தவறி வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். முதற்கட்டமாக அரசு அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரணத்தில், ரூ.50 ஆயிரத்தை வனத்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் இதுவரை கோவையில் வன பிரிவில் காட்டு யானை தாக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அதே காலகட்டத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யானைகள் நடமாட்டத்தால் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருவதாகவும், வனத்துறையினர் எங்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கவிபிரியா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon