மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கொரோனா டிஸ்சார்ஜ் : இந்தியா முதலிடம்!

கொரோனா டிஸ்சார்ஜ் : இந்தியா முதலிடம்!

கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்திலிருந்த இந்தியா பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு நகர்ந்தது. இந்நிலையில் குணமடைபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா பிரேசிலை முந்தியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தரவுகளின் படி உலகம் முழுவதும், 29,006,033 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 19,625,959 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 9,24,105 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலுமிருந்து கொரோனா பாதிப்பு, இறப்பு தகவல்களை ஆரம்பம் முதலே சேகரித்து வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல்கள், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. 37,80,107 எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் (37,23,206), அமெரிக்கா (24,51,406) அடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியாவின் மீட்பு விகிதம் 78 சதவிகிதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 77,512 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மொத்த வழக்குகள் 37,80,107 ஆகும். மீட்கப்பட்ட வழக்குகள் மற்றும் செயலில் உள்ள வழக்குகளுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மொத்த கோவிட் -19 வழக்குகளில் 60 சதவிகிதம் மகாராஷ்டிரா, கர்நாடகா , ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,46,427 ஆகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,86,598 ஆகவும் உள்ளது.

-கவிபிரியா

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon