ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்!

public

ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்லாத 40,000 ரூபாய் நோட்டுகளைக் கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சகோதரிகளான 65 வயது ராஜேஸ்வரி, 60 வயது விஜயலட்சுமி, 57 வயது மகேஸ்வரி என்ற பிரபாவதி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளைப் பொறுக்கி கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வந்தனர்.

பிரபாவதி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபாதையில் இறந்து கிடந்தார். அவரது உடலை தலைமைச் செயலகக் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீஸார் உதவியுடன் அடக்கம் செய்தார். ஆதரவற்ற நிலையில் அவரது சகோதரிகளான மூதாட்டிகள் இருவரும் சாலையோரம் தங்கி வந்தனர்.

வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதால் போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அவர்களது வீட்டுக்குள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டை கட்டப்பட்டு இருந்தன. அவற்றை போலீஸார் சுத்தம் செய்தனர். அப்போது அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லறைகள் குவிந்து கிடப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவற்றை எண்ணி பார்த்ததில் மொத்தம் ரூபாய் 2 லட்சத்துக்கும் அதிகமாகவே இருப்பது தெரியவந்தது. மேலும் செல்லாத ரூபாய் நோட்டுகளான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் சுமார் 40,000 ரூபாய் வரை இருந்துள்ளது. அத்துடன் ஏழு சவரன் தங்க நகைகளும் இருந்தது.

வீட்டுக்குள் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாமல் சாலையோரம் தவித்த மூதாட்டிகளைக்கண்டு அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். போலீஸார் மூதாட்டிகளின் குடிசை வீட்டைச் சுத்தம் செய்து, அவர்களிடம் அந்த நகை, பணத்தை ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு, அவர்களை வீட்டுக்குள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

**ராஜ்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *