கல்குவாரிக்கு மலையை டெண்டர் விடுவதா? பொதுமக்கள் போராட்டம்!

public

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அருகே கல் குவாரிக்காக முருகன் கோயில் உள்ள மலையை டெண்டர் விட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் உச்சியில் பழைமையான முருகன் கோயில் உள்ளது. காலப்போக்கில் இந்தக் கோயில் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அந்த மலையை கல்குவாரிக்கு டெண்டர் விடப்போவதாகத் தகவல் வெளியானது.

இதனால் கொதிப்படைந்த, அக்கிராம மக்கள் முன்னோர்கள் வழிபட்ட முருகன் கோயில் அமைந்துள்ள மலையை டெண்டர் விடக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலாவிடம் மனு அளித்தனர். இதையடுத்து அத்தி கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் கோயில் அத்தி கிராமத்துக்குச் சொந்தமானது என்றும் ஆடி கிருத்திகைக்காக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் மலையில் ஏறி முருகன் கோயிலை சுத்தம் செய்திட முயன்றுள்ளனர். அவர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மலையடிவாரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மலையைக் கல்குவாரிக்கு டெண்டர் விடக் கூடாது எனவும், மலையின் உச்சியில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மூர்த்தி உறுதியளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *