பந்தல் போட்ட ஓனரை காய்கறி வியாபாரியாக்கிய கொரோனா!

public

கொரோனா பரவல் காரணமாகப் போடப்பட்ட ஊரடங்கு, ஈரோட்டில் விசேஷங்களுக்குப் பந்தல் போட்டு சவுண்ட் சர்வீஸ் ஓனராக இருந்தவரை காய்கறி வியாபாரியாக்கி இருக்கிறது.

ஈரோடு வளையல்கார வீதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவர் அதே பகுதியில் ‘எஸ்.எஸ் கல்யாண் ஸ்டோர்’ என்ற பெயரில் ஸ்பீக்கர், பந்தல், சீரியல் செட், சேர், பாத்திரங்கள் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடையை நடத்தி வருகிறார். 40 ஆண்டுகளாக இந்தத் தொழிலை சிறப்பாகச் செய்துவந்த சசிக்குமாரின் வாழ்க்கையை, கொரோனா ஊரடங்கு தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது. பண நெருக்கடியைச் சமாளிக்க பந்தல் கடைக்கு முன்பு இப்போது சிறியதாக காய்கறிக் கடையைப் போட்டு நடத்தி வருகிறார்.

வளையல்கார வீதியில் உள்ள கடையில் இருந்த சசிக்குமார், “நான் இதே பகுதியில் 40 வருஷமா இந்த வாடகை பந்தல், பாத்திரக் கடையை நடத்திக்கிட்டு வர்றேன். வழக்கமான காலத்துலயே இதுல எனக்கு பெரிய வருமானம் இருக்காது. மாசத்துல நாலு முகூர்த்தம் கிடைக்கிறதே பெரிய அபூர்வமாக இருக்கும். இந்த கொரோனா வந்து இருந்த அரைகுறை வாழ்க்கையிலயும் மண்ணை அள்ளிப் போட்ருச்சி. முன்னாடி மாதிரி கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, துக்க நிகழ்ச்சின்னு எதுவும் நடக்காம, இப்ப 20 பேரோட சிம்பிளா முடிச்சிக்கிறாங்க. அதுக்கு பந்தல், சீரியல் செட், ஸ்பீக்கர்ன்னு எதுவும் அவங்களுக்கு தேவைப்படுறது இல்லை. எத்தனை நாளைக்குத் தான் கடையைத் திறந்து வெச்சிக்கிட்டு வியாபாரம் வரும்னு காத்திருக்கிறது. கடைக்கு மாசம் 2,000 ரூபா வாடகை வேற கொடுக்கணும். அதுபோக மூணு வேளை சாப்பாட்டுக்காவது ஒரு வழி வேணும்னு, கடைக்கு முன்னாடியே சின்னதா ஒரு காய்கறிக் கடையை ஆரம்பிச்சிட்டேன்.

நானும் வேலை கேட்டு நாலஞ்சு இடத்துக்கு ஏறி இறங்குனேன். ‘எங்ககிட்ட இருக்க ஆட்களையே குறைக்கலாம்னு இருக்கோம். இதுல எப்படி உங்களுக்கு வேலை கொடுக்குறது’ன்னு எல்லாரும் ஒரே மாதிரியா சொன்னாங்க. இந்த சூழல்ல காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேற எதையும் மக்கள் பெருசா வாங்குறதில்லை. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த மார்க்கெட்டையும், ஈரோடு வ.உ.சி பூங்காவுக்கு மாத்திட்டாங்க. கால் கிலோ காய்கறி வாங்கணும்னாலும், பக்கத்துல இருக்க மார்க்கெட்டுக்கு போன எங்க பகுதி மக்கள் இப்போ எங்க போவாங்கன்னு நினைச்சேன்.

அப்ப தான் சின்னதா ஒரு காய்கறிக் கடை போடலாம் என்கிற யோசனை வந்துச்சி. ஜூன் மாசம் கடை போட்டேன். தினமும் 200 ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்குது. இதை வெச்சித்தான் வீட்டுச்செலவுகளைச் சமாளிக்கிறோம். நாளைக்கே எல்லாம் சுமுகமானாலும் பந்தல் கடையோட சேர்ந்து, இந்த காய்கறிக் கடையையும் நடத்தலாம்னு இருக்கேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *