ஒரே நாளில் 8 அடி உயர்ந்த மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி!

public

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து விநாடிக்கு காவிரியில் 74,642 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கபினி அணை நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வரும் 76,000 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.அந்த வகையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு மொத்தம் 1 லட்சத்து 50,642 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இந்த தண்ணீர் கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 41,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று (ஆகஸ்ட் 8) காலை 10 மணி நிலவரப்படி 50,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளுக்குச் செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். அருவிக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 55,000 கன அடியாக இருந்தது. இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 60,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 73 அடியை தாண்டியது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து இருக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள சுமார் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து வரும் போது, அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுப்பணித் துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *