கேரள விமான விபத்து: இரண்டாக உடைந்ததில் 19 பேர் பலி!

public

துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பேருடன் நேற்று இரவு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில்,இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிக்கி இருப்பவர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில் சிக்கித் தவித்தவர்களை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயிலிருந்து ஏர் இந்தியா axb-1344 விமானத்தில் 191 பேர் பயணித்து கேரளா வந்துள்ளனர். இவர்களில் பெரியவர்கள் 174 பேர், 10 பேர் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் ஆவர். இதில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விமானம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் துபாயிலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு விமானத்தைத் தரையிறக்க விமானிகள் முயன்ற போதும் பலத்த மழை பெய்துள்ளது.

இதனால், ரன்வேயில் தரையிறங்கிய போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கிக் கொண்டு சென்று அங்கிருந்த 35 அடி பள்ளத்தில் விமானம் விழுந்தது. இதனால் விமானத்தின் முன் பக்கம் இரண்டாக உடைந்துள்ளது. அதாவது விமானி அறையிலிருந்து முன்பக்க கதவு வரை உடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில், நள்ளிரவு நிலவரப்படி 19 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மலப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆம்புலன்ஸ்கள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சூழலில் கரிப்பூர் விமான நிலையத்தை நெருங்கியதும்

மழையின் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் வானிலேயே மூன்று சுற்றுகள் சுற்றி தாமதமாகத்தான் தரை இறங்கியது என்று பயணிகள் கூறுகின்றனர். வானிலேயே மூன்று சுற்றுகள் சுற்றியதால் விமானத்தின் எரிபொருள் காலியாகி இருக்கும் அல்லது லேண்டிங் கியர் பழுதாகி இருக்கும் என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்து தொடர்பாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மீட்பு மற்றும் விமான பயணிகளுக்கு உதவுவதற்காக டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளிலிருந்து மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரன்வேயில் இருந்து விலகிய விமானம் இரண்டாக உடைந்து, விபத்துக்குள்ளானது என்று இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், விபத்து தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கோழிக்கோட்டில் நடந்த, மோசமான விபத்து குறித்து வேதனை அடைந்தேன். உறவுகளைப் பறிகொடுத்தவர்களுடன் நமது நினைவுகள் இருக்கும். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபத்து நிலவரம் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *