�சிறப்புத் தொடர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: ஓர் முழுப் பார்வை-7

public

பேராசிரியர்.நா.மணி

தாராளமயமாக்கல் என்பது வர்த்தகம் செய்யும் சூழ்நிலையை எளிமைப்படுத்துவது. குறைந்த சட்டங்கள். குறைந்த ஆளுகை. அதிக வர்த்தக சுதந்திரம்” இப்படி வெளிப்படையாக கூறியவர் காலம்சென்ற மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த அணில் மாதவ் தவே. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இந்த கருத்தை தெரிவித்தார்.

**தாராளயமயமாக்கலுக்கு பலியாகும் சுற்றுச் சூழல்**

இந்திய தாராளமயமாக்கலின் கால் நூற்றாண்டு மதிப்பீடு என்ற அடிப்படையில் அவர் இக்கருத்தை தெரிவித்தார். 2020 மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளியாகியுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை யின் மீதும் வைக்கப்படும் மையமான வலுவான குற்றச்சாட்டு “வர்த்தகத்தை எளிதாக்கவே சுற்றுச்சூழல் பலிகடா ஆக்கப்படுகிறது. விதிமுறைகள் தளர்வுகள் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்கிறது” என்பதே. இந்த இரண்டு கருத்துகளுக்கும் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்! தாராளமயமாக்கலின் ஒருபகுதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு உத்திகள் மாற்றம் என்பது சொல்லாமலே விளங்கும். ‘வர்த்தகம் செய்வதை எளிதாக்கவே எல்லாம்’ என்றால் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக் கொள்வர். ஆனால் யாருடைய வர்த்தகத்தை எளிதாக்குவது என்பதில் தான் தாராளமயமாக்கலின் உண்மையான முகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

நீண்ட நெடுங்காலம் காலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறை இன்றியும், அறியாமையிலும் உலகம் உறங்கிக் கொண்டிருந்தது. 1970 களில் தான் விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை தாராளமயமாக்கலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வும் ஏக காலத்தில் வந்தது என்றே குறிப்பிட வேண்டும். 1980 களின் இடைக் காலம் தான் இரண்டின் துவக்கமும். இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதேபோல் இந்தியாவில் தாராளமயமாக்கல் எட்டிப் பார்த்ததும் இதே காலகட்டத்தில் தான். முறைபடியான தாராளமயமாக்கல் 1991 ஆம் ஆண்டு தொடங்கியது. தாராளமயமாக்கல் என்றால் நம் நினைவுக்கு வருவது கணினி மயமாக்கல். தண்ணீரும், கல்வியும், சுகாதாரமும் கட்டற்ற வணிகமயம் தனியார்மயம் ஆனது இதே காலகட்டத்தில் தான். இயற்கை வள மேலாண்மை கொள்கையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து தனியார்மயத்தின் இலாப வேட்டைக்கு இறையானதும் இதே காலகட்டம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாராளமயமாக்கல் , வர்த்தகம், தொழில் தொடங்குதல் ஆகியவற்றை எளிதாக்கும். யாருக்கு அந்த எளிமை என்பதை அவர்களும் சொல்லவில்லை. நாமும் யாருக்கு என்று கேட்கவில்லை. சிறு தொழில்கள் தொடர்ந்து நசிவடையும் போது, விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்த போது, எந்தத் தொழில் எங்கு வேண்டுமானாலும் தொடங்குவோம் உங்களிடம் கருத்துக் கேட்கக் கூடத் தேவையில்லை என்று விதிகளை மாற்றம் செய்யும் போது தெரிகிறது. அபாயகரமான தொழில்களை சாதாரண தொழில்கள் என்று அறிவிக்கும் போது தெரிகிறது. யாருக்காக வர்த்தக எளிமை என்று புரிகிறது.

ஜிடிபி அதிகரிக்கலாம். மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்குமா ? பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆனால் சமூக வளம் அதிகரிக்குமா? சமூகம் அதற்கு எவ்வளவு விலை தர வேண்டியிருக்கும்? மக்களின் வாழ்வாதாரத்தின் மீது இந்தக் கொள்கைகள் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்? நம் நாடு ஓர் வேளாண்மை பொருளாதார நாடு. வேளாண்மையை இந்தக் கொள்கை பாதுகாக்குமா? இந்தியா இன்னும் போதுமான அளவு முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கிறது. இந்த இயற்கை வள மேலாண்மை கொள்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுமா? என்ற கேள்விகளை வலுவாக கேட்கவில்லை. இப்போது மேலெழுந்து உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அம்சங்கள் தாராளமயமாக்கல் காலகட்டத்தில் எப்படி இருக்கும்? எங்கள் வனங்கள் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் நம் நினைவுக்கு அப்போது வரவேயில்லை.

ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே வருகிறார்கள். ஏழை பணக்காரன் இடைவெளியை குறைக்காவிட்டால் உலகம் அதற்கு பெரும் விளைவை சந்திக்க நேரிடும் உலக வங்கியே எச்சரிக்கும் காலம் வந்துவிட்டது. உலக ஏற்றத் தாழ்வு அறிக்கை என்று ஒரு அறிக்கையை நூறு பொருளாதார நிபுணர்களைக் கொண்டு இந்த அறிக்கையை உலக வங்கி தயாரித்து இருக்கிறது. பணக்காரர்கள் என்பதை நம்மைவிட நாலு காசு கூட இருப்பவர்கள் என்று கருதிக் கொண்டோம். அதன் விளைவாக அமைதியாகி விட்டோம் . நாமும் பலன் பெற முடியும் என்று மனப்பால் குடித்தோம். ஆட்சியாளர்கள், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சக்தி மிக்கவர்களே இந்தப் பணக்காரர்கள். அத்தனை பெரிய பணக்காரர்களைத் தான் இங்கு பணக்காரர்கள் என்று சொல்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வில்லை.

மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச் சாலைகள், காடுகள், கனிம வளங்கள் ஆகியவற்றின் மீது அவர்கள் ஏறி வலம் வரும் போது யாரென்று புரிகிறது. உலகமயமாக்கல் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது அரசு மருத்துவ மனைகள், பொது சுகாதாரம், இவ்வளவு தூரம் நசிந்து போயிருக்காது. கொரோனாவில் இவ்வளவு தூரம் கொடிய துன்பத்தை சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று உணர்ந்தது போல் தெரியவில்லை. இயற்கை வளங்கள் விற்பனை பொருள் ஆகிவிட்டால் விற்பதை யார் வாங்குவது யார்? இயற்கை வளங்களை பணத்தின் மதிப்பு கொண்டு தீர்மானித்தல் சரியா ? அதற்கும் நமக்கும் நம் தலைமுறைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற விவாதமும் மேலெழுந்து வரவில்லை.

இதன் விளைவாக தாராளமயமாக்கல் நிகழ்ந்து முப்பது ஆண்டுகள் கழிந்த பின்னர், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து இருப்பது, நீர், நிலம்,காற்று மாசுபட்டு இருப்பது நன்கு கண்கூடாக தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துள்ள ஆயிரத்தாண்டு இலக்குகளில் இரண்டான வறுமைக்கு முடிவுகட்டுதல், அனைவருக்கும் உணவு உத்தரவாதம், நீடித்த நிலைத்த வளர்ச்சியை உத்திரவாதம் செய்தல், ஆகியவை பன்னாட்டு நிறுவனங்களின் பேராசையால் மிகவும் தள்ளிப் போகிறது என்று தெரிகிறது.

**தாராளமயத்தை வீழ்த்த முடியாதா?**

என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? தமிழ் நாட்டில் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரசி வழங்கல் கூட தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே. ஆனால் தாராளமயமாக்கல் கொள்கையை எதிர்த்து எப்படி நடைமுறைக்கு கொண்டு வர முடிந்தது? மக்களின் விருப்பம். விடாப்பிடியான போராட்டங்கள். அரசியல் நிலைப்பாடுகள். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களில் எப்படி வீறு கொண்டு எழுந்து மக்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள்? அப்படியான எதிர்வினைகள் மக்களிடம் இருந்து தொடர்ந்து இந்தியாவெங்கும் வரவேண்டும்.

பெருநிறுவனங்களின் பெருவிருப்பத்திற்காக சட்டங்கள் சமைக்கப்படுவது தாராளம், தனியார்மயம் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையின் வேர்களில் இருந்தே. தாராளமயமாக்கலைத் தடுக்காமல் இதனைத் தடுக்கவே முடியாதா? தாராளமயமாக்கல் கொள்கைகள் அமுலில் இருக்கும் போதே தடுத்து நிறுத்தும் சக்திக்கு பல நாடுகளில் உதாரணங்கள் உள்ளன. மனிதர்கள் விழிப்படைந்தால், ஒன்றுபட்டால், கேள்வி கேட்டால் அர்த்தம் உள்ள உரையாடலைக் தொடங்கினால் மொத்த கொள்கைகளிலும் மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். அர்த்தமுள்ள மனிதப் பேச்சு உலகை மாற்றும் என்பார் உலகின் மாற்றுக் கல்விக்கான தந்தை என்று அழைக்கப்படும் ஃபாவ்லோ பிரைரை. அத்தகைய மனிதப் பேச்சு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை விஷயத்தில் தொடங்கியிருக்கிறது. பார்ப்போம்.

**நிறைந்தது**

**கட்டுரையாளர் குறிப்பு**:

பேராசிரியர் நா. மணி, மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம். Environment climate change and disaster managementஎன்ற நூலின் ஆசிரியர்.

[முந்தைய பகுதி](https://minnambalam.com/public/2020/08/05/9/eia-2020-madhava-gadgil-method-public-hearings)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *