மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

தாமதமான அமரர் ஊர்தி: தள்ளுவண்டியில் உடலை எடுத்துச்சென்ற அவலம்!

தாமதமான அமரர் ஊர்தி: தள்ளுவண்டியில் உடலை எடுத்துச்சென்ற அவலம்!

தேனியில் அமரர் ஊர்தி வராத நிலையில், தள்ளுவண்டியில் இறந்த பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயிற்றுப்போக்கு காரணமாக அருகே உள்ள கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூதாட்டி வீடு திரும்பிய நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், அவரை தொடர்புகொண்ட சுகாதாரத் துறையினர், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அந்த மூதாட்டி நேற்று முன்தினம் (ஜூலை 31) இரவு உயிரிழந்தார்.

நேற்று (ஆகஸ்ட் 1) இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், விரைவாக உடலை அடக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அமரர் ஊர்தி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமார் 12 மணி நேரம் கடந்தும் அமரர் ஊர்தி வராததால், அக்கம் பக்கத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து அவர் மகன் கூடலூர் மயானத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

முக்கிய வீதிகளின் வழியே தள்ளுவண்டியில் சடலத்தை வைத்து கொண்டு செல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல, சில தினங்களுக்கு முன்னர், கொடுவிலார்பட்டியில், கொரோனா பாதித்த நபரை அழைத்துச் செல்ல அமரர் ஊர்தி வராததால், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon