தேர்தல் முன்விரோதம் -இருதரப்பினரிடையே மோதல்: கடலூரில் பதற்றம்!

public

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்பகை காரணமாகக் கடலூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் விளைவாக தாழங்குடா பகுதி மீனவர்களின் படகுகள், வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா , அவரை எதிர்த்து மதியழகன் மனைவி சாந்தி ஆகிய இருவரும் போட்டியிட்டனர். சாந்தி வெற்றி பெற்ற நிலையில் இரு தரப்புக்கும் இடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. கைகலப்பு, மோதல் என இரு தரப்புக்கும் இடையேயான விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மாசிலாமணியின் தம்பி மதிவாணன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இரவு 9.30 மணி அளவில் கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா கிராமத்திற்குச் சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மதிவாணனின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் கூடினர்.

இந்த கொலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது கணவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாசிலாமணியின் ஆதரவாளர்கள், தாழங்குடா கடற்கரையில் நிற்க வைக்கப்பட்டிருந்த மதியழகன் தரப்பினரது 20க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள், படகுகள் ஆகியவற்றைத் தீயிட்டு எரித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதோடு மதியழகன் தரப்பினரின் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தால் நேற்று இரவு தாழங்குடா கடற்கரை முழுவதும் புகை மூட்டமாகக் காட்சி அளித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதே சமயத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கடற்கரை பகுதியில் குவிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் எஸ்பி அபினவ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக மதியழகன் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும், மாசிலாமணி தரப்பைச் சேர்ந்த 50 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கொலைசெய்யப்பட்ட மதிவாணன் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *