மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

முழு ஊரடங்கு: காவல் துறை எச்சரிக்கை!

முழு ஊரடங்கு: காவல் துறை எச்சரிக்கை!

இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரொனாவால் 2,51,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றாலும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு தளர்வுகளை அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த மாதம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில், நேற்றே மீன் அங்காடி, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது. குறிப்பாகக் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவு குவிந்தனர். எனவே கூட்டத்தைக் கட்டுப்படுத்த நான்கு நுழைவாயில்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அடையாள அட்டை வைத்திருந்த வியாபாரிகளை மட்டுமே போலீஸார் உள்ளே அனுமதித்தனர்.

இன்று ஆடி பெருக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், மருத்துவக் காரணம் இன்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை நேற்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2 முதல் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்க வேண்டும். அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.

மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைப் பிரிவு 144இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330 / 044-23452362 அல்லது 90031 30103 என்னும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon