மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கனமழை: ரூ.300 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்!

கனமழை: ரூ.300 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்!

வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கன மழையால் தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 300 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 80 சதவிகிதம் தொழிலாளர்கள் பெண்கள். ஏற்கெனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்துள்ள இந்தத் தொழில், தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம், “தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தீப்பெட்டி பண்டல்கள் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதுதவிர தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கினால் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலும் நிறுத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது.

தற்போது அளிக்கப்பட்ட தளர்வால் அரசின் வழிகாட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், கடந்த 20 நாட்களாக வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், தீப்பெட்டி ஆலைகளிலிருந்து ஏற்கனவே லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் இறக்குமதி செய்யப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழகத்தில் உற்பத்தி ஆலைகளிலுள்ள குடோன்களிலும் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தீப்பெட்டி தயாரிப்புக்குத் தேவையான குச்சி, அட்டை, மருந்துப்பொருள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் 30 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் கடந்த மூன்று மாதங்களாகத் தவித்து வந்த நிலையில், தற்போது மழையினால் ஏற்றும

தியும் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon