மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

உலக சாம்பியன் ஆக பந்தய சைக்கிளைப் பரிசளித்த ஜனாதிபதி!

உலக சாம்பியன் ஆக பந்தய சைக்கிளைப் பரிசளித்த ஜனாதிபதி!

உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேற பள்ளி மாணவனுக்குப் பந்தய சைக்கிள் ஒன்றை ஜனாதிபதி பரிசளித்துள்ளார்.

டெல்லியில் சர்வோதயா பால வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவன் ரியாஸ். பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவன். அவனுடைய குடும்பத்தினர், அங்கு வசித்து வந்தபோதிலும் ரியாஸ் மட்டும் காசியாபாத்தில் ஒரு வாடகை குடியிருப்பில் தங்கி டெல்லியில் படித்து வருகிறான். அவனுடைய தந்தை சமையற்காரராக சொற்ப வருமானத்தில் கஷ்டப்படுவதால், படிப்பு நேரம் போக மற்ற நேரத்தில் ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்து தந்தைக்குப் பணம் அனுப்பி வருகிறான்.

ரியாஸுக்கு உலக சைக்கிள் சாம்பியனாக வேண்டும் என்று ஆசை. அதனால், கடுமையாக சைக்கிள் பயிற்சி எடுத்து வருகிறான். 2017ஆம் ஆண்டு, டெல்லி மாநில சைக்கிள் சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றான். தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் நான்காவது இடத்தை பிடித்தான்.

டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியாளர் மூலம் ரியாஸ் சைக்கிள் பயிற்சி பெற்று வருகிறான். ஆனால், சொந்தமாக பந்தய சைக்கிள் வாங்க முடியாமல், இரவல் சைக்கிளில் பயிற்சி பெற்று வருகிறான், இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. இதை அறிந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரியாஸுக்கு பந்தய சைக்கிளைப் பரிசளித்தார். அவன் உலக சாம்பியனாக வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon