மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

புதிய கல்விக் கொள்கை: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கை:  பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழகங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1986, அதாவது 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கைக்குப் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கையில், மருத்துவம் மற்றும் பட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர்கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையமே அங்கீகாரம், நிதியளித்தல், கல்வி முறைகளைத் தீர்மானிக்கும். அதேபோன்று உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உயர்கல்வியில் 2035ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3.5 கோடி புதிய இடங்களை உருவாக்குவது புதிய கல்விக் கொள்கையின் இலக்காக உள்ளது.

இந்தச் சூழலில், உயர்கல்வித் துறை தொடர்பாக புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஊட்ட வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களுடன் கூடிய நகலை இந்தி மற்றும் ஆங்கில வடிவிலும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ளது.

கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து யுஜிசி வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

-கவிபிரியா

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon