மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விபத்து: 9 பேர் பலி!

விசாகப்பட்டினம் துறைமுகத்தில்  விபத்து: 9 பேர் பலி!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் வளாகத்தில் ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்கரை ஓரத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனத்தில் புதிய கப்பல்கள் கட்டுதல், பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

”இது புதிதாக அமைக்கப்பட்ட கிரேன் என்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் வரை சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பாக மல்கபுரம் போலீசார் விசாரித்து வருவதாகவும் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.சீனிவாச ராவ், ”இவ்விபத்து குறித்து மாவட்ட அட்சியரிடம் கேட்டறிந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் இவ்விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையருக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

விபத்து குறித்துத் தகவலறிந்த, கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதுகுறித்து அங்குக் கூடியவர்களில் ஒருவர் கூறுகையில், உள்ளே யாருக்கு என்ன நடந்தது. யார் உயிரிழந்தார்கள், யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற எந்தவிவரங்களையும், காவல்துறையினரோ, அதிகாரிகளோ கூறவில்லை” என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

-கவிபிரியா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon