மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கொரோனா: கோவை மருத்துவர் பலி!

கொரோனா: கோவை மருத்துவர் பலி!

கோவையில் நரம்பியல் மருத்துவத்தில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வந்த மருத்துவர் பிரனேஷ் உயிரிழந்துள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் வசித்து வந்தவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் எம்.பி.பிரனேஷ். வயது 83. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி  ஓய்வு பெற்ற பின்னர், காந்திபுரம் பகுதியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.

நரம்பியல் துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த இவர் கோவை மக்களிடையே பிரபலமானவர். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அண்மையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பாதுகாப்பு நடைமுறைகளுடன் அவரது உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரம்பியல் மருத்துவ நிபுணர் எம்.பி.பிரனேஷ் மறைவுக்கு, இந்திய மருத்துவ சங்கத்தினரும், கோவை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவையில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் மருத்துவர் பிரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon