மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தமிழகம் : மசூதிகள் திறக்கப்படாததால் மொட்டை மாடியில் தொழுகை!

தமிழகம் : மசூதிகள் திறக்கப்படாததால் மொட்டை மாடியில் தொழுகை!

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிக்குச் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே தொழுகை செய்தனர்.

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைத் தூதர் இப்ராகிமின் தியாக வாழ்வை நினைவு கூறும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் தங்களால் இயன்ற அளவிற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கி, இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடுவர்.

பொதுவாக மசூதிகளுக்குச் சென்று, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தொழுகை செய்வது வழக்கம். பிறை தெரிவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1) பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

டெல்லி ஜும்மா மசூதி

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதிக்கு வந்து இஸ்லாமியர்கள்  தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின்னர் அனைவரும்  சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

தமிழகத்தில் வீடுகளில் தொழுகை

தமிழகத்தில் இஸ்லாமியச் சகோதரர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும்.குர்பாணி அளிப்பதையும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.  அதன்படி இன்று மசூதிகள் திறக்கப்படாமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும் தொழுகை செய்தனர்.  கோவை உள்ளிட்ட நகரங்களில் மொட்டை மாடியில் இஸ்லாமியர்கள்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை செய்தனர்.

கேரளாவில் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்ட நிலையில், அங்கு மசூதிகளைத் திறக்க முதல்வர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.

பிரதமர் வாழ்த்து

இந்த, திருநாளில் சமூக நல்லிணக்கத்தையும். சகோதரத்துவத்தையும், அன்பையும் பரிமாறிக் கொள்வோம் என்று கூறி இஸ்லாமியர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட  அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-கவிபிரியா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon