மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

நோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

நோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமனைக்கு அனுமதி ரத்து!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக வழங்கப்பட்ட சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா என்ற உயிர்க்கொல்லி மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை என்ற போர்வையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது.

அதன்படி பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்தது.

எனினும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு நோயாளி ஒருவரிடம் இருந்து 19 நாளுக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குத் தேவையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வகையில் அரசாணை எண்.240 சுகாதாரத் துறை ஜூன் 5 அன்று அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் (Be well) மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், அரசு நெறி முறைப்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை.

கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி வெல் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகப் புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

-கவிபிரியா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon