மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ஆன்லைன் கிளாஸ் : தாலியை விற்ற தாய்!

ஆன்லைன் கிளாஸ் : தாலியை விற்ற தாய்!

குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்பதற்காக, தன்னுடைய தாலியை அடமானம் வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தாய்.

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொலைக்காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடாக் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரியின் இரண்டு குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். தங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் எனக் கவலையடைந்த கஸ்தூரி தன்னுடைய தாலியை அடமானம் வைத்து தொலைக்காட்சி வாங்கியுள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், " எப்படியாவது தொலைக்காட்சி வாங்குங்கள் என ஆசிரியர் கூறினார். இதனால் பல இடங்களில் கடன் கேட்டு பார்த்தேன். யாரும் தரவில்லை. ஊரடங்கினால் எனக்கும், என் கணவருக்கும் வேலையில்லை. அதனால் என் தாலியை 20 ஆயிரத்துக்கு அடகு வைத்து 14 ஆயிரத்துக்குத் தொலைக்காட்சி வாங்கினேன்” என கூறினார் .

இந்த தகவலை ஊடகத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்ட அம்மாவட்ட நிர்வாக அதிகாரி பட்டீல் , அப்பெண்ணின் தாலி விரைவில் மீட்டுக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடலூரில் ஆன்லைன் வகுப்புக்காகப் பெற்றோர்கள் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon