மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை-2020- முழு பார்வை! சிறப்புத் தொடர்-2

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை-2020- முழு பார்வை! சிறப்புத் தொடர்-2

பேரா.நா.மணி

விவசாயத்திற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கும் என்ன தொடர்பு?

கரும்பும் மஞ்சளும் நன்கு விளையும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில், ஒரு சிறிய ஆய்வை நடத்தினோம். அதில் "தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளில் எழுபது விழுக்காடு பேர் 65 வயதைக் கடந்தவர்கள்" என்ற உண்மையைக் கண்டறிந்தோம். இது ஏதோ அந்தப் பகுதியில் உள்ள பிரத்யேகமான பிரச்சினை அல்ல. பொதுவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்ய வில்லை. இதனைப் பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கிறது. இப்படி விவசாயிகள் மகிழ்ச்சியின்றி உழைத்து கொட்டி உருவாக்கும் பொருட்களை தின்று செரித்தே நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

இந்த விவசாயம் இயற்கை சூழலியல் மண்டலத்தை நம்பி இருக்கிறது. என்னதான் உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அள்ளி அள்ளி தெளித்தாலும் சூழலியல் மண்டலம் சுக்குநூறாகிப் போனால் எந்தவித வேளாண் உற்பத்தியும் வீடு வந்து சேராது. இந்த உரமும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் கூட சூழலியல் மண்டலத்தில் பெரும் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது என்பது தனிக் கதை. பேரளவு சூழலியல் மண்டலத்திற்கும் வேளாண்மை சூழலியல் மண்டலத்திற்கும் ஓர் ஒத்திசைவும் ஒழுங்கமைபும் ஒரு நீடித்த நிலைத்த சூழல் சம நிலையும் இருந்து வருகிறது. இது இருக்கும் வரையே வேளாண்மை உற்பத்தியில் சிக்கல் இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். வேளாண்மை சூழலியல் மண்டலத்திற்கும் இயற்கை சூழலியல் மண்டலத்திறம் உள்ள தொடர்புகளை நமது நவீன தொழில் நுட்ப அறிவு கொண்டு ஆய்ந்து அறிந்தவை மிகவும் சொற்பம்.

இந்த வகையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணி, இந்த உயிர் கோளத்தில் இருக்கும் அன்னைத்து ஜீவராசிகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டு உள்ளது. விவசாயம் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அதன் எதிர் காலம் என முக்கியத்துவம் பெறுகிறது.

1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமும் மத்திய அரசும்

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம். இந்த சட்டம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உருவாக்கவும், கழிவு மேலாண்மை உத்திகளை வகுக்கவும், தொழில் சாலைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பு செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆபத்தான கழிவுகளை கையாளுதல், உற்பத்தி முறைகளை சீராய்வு செய்தல், இதற்கென ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், ஆய்வகங்களை அமைத்தல், சூழல் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை திரட்டுதல் வெளியிடுதல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இச்சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமும் சூழல் மதிப்பீட்டு அறிக்கையும்

1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் பிரிவு 3 உட்பிரிவு 2 இன்படி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுத்தல், குறைத்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தித் தான் தற்போது மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை வெளிக் கொண்டு வருகிறது. இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் தலையாய கடமை 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளை பாதுகாப்பதே. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்க அதிகரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் பொறுப்புகள் அதிகரிக்கும். தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவது மட்டுமல்ல பெரும் முதலீட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த, இயற்கை வளங்கள் சார்ந்த, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச் சாலைகள் , வனங்களிலும் மலைகளிலும் உள்ள கனிம வளங்களை மையப்படுத்தும் திட்டங்கள், என ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு பணிகளும் அதன் பங்களிப்பும் முக்கியமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கும் அந்த சட்டத்தின் மாண்பை நிலை நிறுத்த வேண்டிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பின் பணிகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

பரந்த பொருளில் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை செய்ய வேண்டிய சட்டம் அல்லது அந்த சட்டப் பணியை நிறைவேற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பு, தொழில் மற்றும் வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கு எளிய வழிகளை கண்டறிவது ஆபத்தானது. இது இந்த அமைச்சகத்தின் பணி அல்ல. இப்படி செய்வது இது வேலியே பயிரை மேய்வது போன்ற செயல் அல்ல. மாறாக பயிரே வேலியை மேயும் அபாயத்தை குறிக்கிறது.

நடைமுறைக்கு வரவிருக்கும் திட்டங்கள் தொழில்கள் அதற்கு வழங்கும் அனுமதி ஆகியவற்றுக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை" என்று மத்திய அரசு கூறலாம். 'அட ஆமா'. 'அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை'என்று நாம் கூட நினைக்கலாம். அப்படித் தான் பார்த்தவுடன் பல விஷயங்கள் தோன்றும். ஆனால் கவனமுடன் நாம் இதனை பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக, நமக்கு விவசாயிகள் என்றதும் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். குத்தகைக்கு உழும் விவசாயிகள் கூட ஞாபகத்துக்கு வர மாட்டார்கள். ஆனால் உண்மையில் விவசாயிகள் என்ற வார்த்தைக்கே பரந்த பொருள் இருக்கிறது. வேளாண்மையை தன் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கொண்டு வாழும் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள், கூலி விவசாயிகள், கோழிப் பண்ணை வைத்திருப்போர், மீன் வளர்ப்பு கால்நடை வளர்ப்பு, பட்டுப் பூச்சி வளர்த்தல், தேனீ வளர்ப்பு, மலைகளில் உள்ள எஸ்டேடகள் அல்லாத தேயிலை காப்பி ரப்பர் தோட்டங்கள், மண்புழு வளர்ப்பு, மலைவாழ் மக்கள், என விவசாயிகள் என்ற பதத்திற்கு பரந்த விரிந்த பொருள் இருக்கிறது. இப்படிக் கூறுவது நாம் அல்ல. மத்திய அரசின் 2007 ஆம் ஆண்டு தேசிய விவசாயிகள் கொள்கை. இந்த மக்கள் திரளில் யாரை பாதித்தாலும் அது விவசாயிகளின் பாதிப்பே. இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு திட்டமும் விவசாயத்தின் வழியாக மக்கள் அனைவரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டமே.

ஏன் கொரோனா பின்புலத்தில் இருந்து EIA வை அணுக வேண்டும்?

அதிலும் இந்த கொரோனா நம்மை ஒரு புதிய இயல்பு வாழ்க்கையில் தள்ளி இருக்கிறது. பல விஷயங்களை மறு சிந்தனைக்கு உட்படுத்தி உள்ளது. இதிலும் கூட, ஏற்கனவே மனித சமூகம், இயற்கை சூழல் மண்டலத்திற்கு ஏற்படுத்திய தீங்கின் தாக்கம் இல்லாமல் இல்லை. இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக விவசாயத்தில் அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை கொரோனா சொல்கிறது. இந்த தொற்று பெரும் பரவல் காலகட்டத்தில் ஊர் பொது முடக்கம் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அவர்கள் பட்டபாடுகள், அழுத கண்ணீர், மீண்டும் எத்தனை பேர் திரும்பி வருவார்கள் என்பது கேள்விக்குறி.

இவர்கள் வட இந்திய கிராமங்களை சேர்ந்தவர்கள். பெரும்பாலான மக்கள் வறண்ட மானாவரி நிலப் பகுதி கிராமங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் புனர்வாழ்வுக்கு இப்போது என்ன திட்டங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக நீடித்த நிலைத்த வாழ்க்கைக்காக நிலைப்புறு வளர்ச்சியை பேண உடனடியாக திட்டங்கள் தீட்டப் பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அமைப்பின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். திருத்தி அமைத்திருக்க வேண்டும்.

பொது முடக்கத்திறகு சற்று முன்னதாக மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு மறு வரைவு அறிக்கையை வெளியிட்டு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் கொரானா காலம் முடிந்த பிறகேனும் கருத்து கேட்டு கலந்தாய்வு கூட்டத்தை நிதானமாக நடத்தி இருக்க வேண்டும். ‌ அதற்கு பதிலாக கொரானா காலத்திலேயே நடத்தி முடிக்க துடிக்கிறது ஏன்? நாங்கள் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாதவர்கள். எங்களுக்கு எங்கள் மொழியில் மொழிபெயர்த்து கொடுங்கள் என்று நீதிமன்றம் வழியாக கேட்டால் கூட தர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறது ஏன்?

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்

கட்டுரையாளர் குறிப்பு:

பேராசிரியர் நா. மணி ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறைத் தலைவர். Environment climate change and disaster management என்ற நூலின் ஆசிரியர்.

பகுதி 1

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon