மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

அசாமில் வெள்ள பாதிப்பு: நீலகிரியில் தேயிலை விலை உயர்வு!

அசாமில் வெள்ள பாதிப்பு: நீலகிரியில் தேயிலை விலை உயர்வு!

அசாம் வெள்ளத்தில் தேயிலை உற்பத்தி பாதிப்பட்டுள்ளதால் நீலகிரியில் விளையும் பச்சை தேயிலையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கிய பொருளாதாரமாக விளங்குகிறது. இங்கு 65,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் 60,000 பேர் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலையைப் பறித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால், உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது. ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை விலை கிடைத்தது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதோடு, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தினக்கூலியைக் கொடுக்க முடியாமல் திணறி வந்தனர்.

பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.21 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர் குமரன், “இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 1,350 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 950 மில்லியன் கிலோ உள்நாட்டு தேவைக்காகவும், 260 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சமீபத்தில் அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கு விவசாயம் மற்றும் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் உள்நாட்டில் தேயிலைத் தூள் தேவை அதிகமாக இருக்கிறது. ஒரு கிலோ தேயிலைத்தூள் ரூ.141-க்கு ஏலம் எடுக்கப்படுகிறது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை அதிகரித்து இருக்கிறது. கிரேடு அடிப்படையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.21 முதல் ரூ.30 வரை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.

நீலகிரியில் ஒரு ஆண்டுக்கு 130 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்தியாவிலிருந்து கென்யா நாட்டுக்கு மட்டும் தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்கோசர்வ் தொழிற்சாலைகள் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.16.50 விவசாயிகளுக்கு வழங்குமாறு தேயிலை வாரியம் அறிவித்துள்ளது” என்று அவர் கூறினார்.

குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூளுக்கு விலை உயர்வு ஏற்பட்டதால், விவசாயிகள் பறிக்கும் பச்சை தேயிலைக்கும் விலை உயர்ந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பச்சை தேயிலை விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020