மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

‘மாணவர்கள் இறுதி செமஸ்டருக்கு தயாராகுங்கள்’: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி!

‘மாணவர்கள் இறுதி செமஸ்டருக்கு தயாராகுங்கள்’: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி!

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வைச் செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற யுஜிசி பரிந்துரையின் படி மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியது. தமிழகத்திலும் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்யக் கோரி நாடு முழுவதிலும் இருந்து 31 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில், “கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் யுஜிசி சார்பில் நேற்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரு முறைகளிலும் தேர்வு நடத்தப் பல்கலைக் கழகங்கள் இசைவு தெரிவித்துள்ளன. ஒரு மாணவரால் தேர்வில் கலந்துகொள்ள முடியாத சமயத்தில் அவர்களுக்கு எந்த ஒரு அசவுகரியமும் ஏற்படாத வண்ணம் சிறப்புத் தேர்வு நடத்தப்படும்.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து, இறுதித் தேர்வுகளுக்கு வராமல் பட்டங்களை வழங்குவதற்கான முடிவை எடுத்துள்ளது என்பது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முரணானது.

அத்தகைய முடிவுகள், நாட்டின் உயர்கல்வியின் தரத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடியது. மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் உடல்நலம், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் படியே தேர்வுகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான சிவசேனா சார்பில், இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் யுஜிசி, மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் புறக்கணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில், மத்திய, மாநிலம் என நாடு முழுவதும் 818 பல்கலைக் கழகங்களிலிருந்து தேர்வுகள் நடத்துவது தொடர்பாகக் கிடைத்த தகவலின் படி, 209 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தி முடித்துள்ளன. 394 பல்கலைக்கழகங்கள் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்பது தெரியவந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே யுஜிசியின் பிரமாணப் பத்திரத்துக்கு மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நாடு முழுவதும் அமலில் இருக்கும் பொது முடக்கம், ஜம்மு காஷ்மீரில் இணையச் சேவை கட்டுப்பாடு ஆகியவற்றை யுஜிசி வழிகாட்டுதலில் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 31) நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி, மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மனுதாரர் ஒருவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். “பல பல்கலைக் கழகங்களில் அடிப்படைத் தகவல் தொழிநுட்ப வசதிகள் கூட இல்லாததால் , ஒரே மாதிரியாக அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது” என்று அவர் வாதிட்டுள்ளார்.

தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்குப் பின்னர் விருப்பத் தேர்வு நடத்துவது என்பது சிக்கலானது என்று குறிப்பிட்டுள்ள அபிஷேக் மனு சிங்வி, தேர்வுகள் ரத்து செய்யப்படுவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய விசாரணையின் போது யுஜிசி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மாணவர்கள் தொடர்ந்து தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். உச்சநீதிமன்ற விசாரணையின் காரணமாக தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதைவிசாரித்த நீதிபதிகள், அரசு நடத்தும் கல்லூரிகளுக்கான இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துள்ள மகாராஷ்டிரா அரசிடம், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு எடுத்த முடிவு குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், இவ்வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுப்புத் தெரிவித்தனர். அதோடு, உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும் யுஜிசிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-கவிபிரியா

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon