மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டு சந்தை திறப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டு சந்தை திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 31 வரையில் தமிழக அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை 31), காலை 5.30 மணியிலிருந்து ஆட்டு சந்தையில் கூட்டம் கூடியிருப்பது தருமபுரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கம்பை நல்லூரில் ஆட்டு சந்தை உள்ளது. இங்கு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரம் ஆடுகளுடன் வந்து இன்று குவிந்துள்ளனர். ஆடு, கோழிகளை வாங்க நகரபுறங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்துள்ளனர். நாளை ஆடி 18 என்பதால் இன்று ஆடு விற்பனை நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளி இல்லாமலும், முகத்தில் முககவசம் இல்லாமலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது.

இதுகுறித்து இவ்வளவு பேர் சந்தையில் கூடியது எப்படி என்றும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் எங்கே என்றும் நாம் விசாரித்ததில், “கடந்த இரண்டு நாட்களாகச் சந்தை கூடுவது சம்பந்தமாக, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஒருவருக்கு ஒருவர் கேட்டுக்கொண்டனர். வாட்ஸ் அப் மூலமும் செய்திகள் பரவியதால் இன்று காலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டனர். காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார் ஒரு ஆட்டு வியாபாரி.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரும் நேரத்தில் இப்படி சந்தைத் திறக்கப்பட்டு இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதால், கொரோனா தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

-வணங்காமுடி

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon