ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப், தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.
இந்த சூழலில் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு பள்ளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்களிடம், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவைப்படும் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச வசதிகளை கருத்தில் கொண்டு, வகுப்புகளை நடத்த பள்ளிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் கடலூரில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பண்ருட்டி அருகே சிறுதொண்டமா தேவி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற கூலித் தொழிலாளியின் மகன் விக்னேஷ். வயது 14. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். 9 ஆம் வகுப்பு முடித்த விக்னேஷ் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த சூழலில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வரும் நிலையில், விக்னேஷ் தனது பெற்றோர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதித்து வறுமையில் இருந்த விக்னேஷின் தந்தையால் ஸ்மார்ட்போன் வாங்கி தர முடியவில்லை. வீட்டில் இருக்கும் முந்திரி கொட்டைகளை விற்று வாங்கி தருவதாகவும், இதற்காக இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டுமென்றும் விக்னேஷிடம் அவரது தந்தை கூறியிருக்கிறார்.
இதனால் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியிலிருந்த மாணவர் தூக்கிலிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விக்னேஷை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகப் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள கடலூர் காவல்துறையினர் மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
விக்னேஷை போன்ற எத்தனையோ மாணவர்கள் கிராமப்புறங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கான போதிய வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக மாற்று வழியை உருவாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-கவிபிரியா