மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை!

ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை!

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது.

தற்போதைய ஊரடங்கை ஒரு சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும்” என்று கூறியுள்ளது.

மேலும், “நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்களை தொகுப்பாக வழங்க வேண்டும். உள்ளது.ஆகஸ்ட் 7 ஆம் தேதி நியாய விலை கடைகள் இயங்கும். 7 ஆம் தேதிக்குப் பதில் மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும்” என்றும் கூறியுள்ளது தமிழக அரசு.

இது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளிக்கக் கூடிய செய்தியாகவே உள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

4 மாதங்களாக வீட்டுச் செலவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கையிலிருப்பில் வைத்திருந்த பணமும் கரைந்து, கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர். முன்பு இருந்த நிலைதான் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால், அதுவரையில் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்தான் சாமானிய மக்களின் சில நாட்களின் தேவையையாவது பூர்த்தி செய்துவந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏது வழி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.

எழில்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon