கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவிவரும் அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசால் முன்னிலை பணியாளர்களான காவல் துறையினரும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காரணம், எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் அலட்சியமாக இருக்கிறார்கள். மாஸ்க் போடாமல் வருபவர்கள், ஹெல்மெட் போடாமல் இரு சக்கரம் ஓட்டுபவர்கள், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் வைத்திருக்காதவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் , மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது என காவல் துறையினர் பல தரப்பினரை விசாரிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு ஒரு காவல் நிலையத்தில் இவ்வளவு வழக்குப் போடவேண்டும் என்று டார்கெட் கொடுத்திருப்பதால், அனைத்து காவல் நிலைய போலீசார்களும் சாலையில் நின்றுகொண்டு விருப்பம் இல்லாமல் வழக்கு பதிவு செய்வது, சில வழக்குகளில் கைதானவர்களை ரிமாண்ட் செய்வது, புகார் வாங்குவது, விசாரிப்பது, என மக்களோடு நெருக்கமாக இருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று போலீசாருக்கு எளிதாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது.
கடலூர் மாவட்டம் முதுநகர் (OT) காவல் நிலையத்தில், எஸ்.பி தனிப்பிரிவு ஏட்டு உட்பட 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காவல் நிலையத்திலிருந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, ரைட்டர், என 50க்கும் மேற்பட்ட போலீசார்கள் காவல் நிலையத்திற்கு வராமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி. ஸ்ரீஅபினவ், காவல் நிலையத்துக்கு போலீசார் வருகை தராதது பிரச்சினையாகிவிடும் என்று கருதி, கடலூர் உட்கோட்டத்தில் உள்ள ஆறு காவல் நிலையத்திலிருந்தும், ஒரு காவல் நிலையத்துக்கு இரண்டுபேர் என 12 போலீசாரை முதுநகர் காவல் நிலையத்திற்கு பணிக்கு வர சொல்லியுள்ளார். இதையடுத்து முதுநகர் (OT) காவல் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளதாக எஸ்.பி அலுவலக வட்டத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-வணங்காமுடி