மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

ஆபத்தை உணராததால் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்!

ஆபத்தை உணராததால் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்!

ஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில் காரொன்று அடித்து செல்லப்படும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அசாமில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஏரி, குளங்கள், ஆறுகள், சிற்றோடைகள் ஆகியவை நிரம்பி வருகின்றன.

அதுபோன்று அனந்த்பூர் மாவட்டம் ராஜபுரம் அருகே உள்ள ஆற்று பாலத்தின் மேல் வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பாலத்தை, நேற்று காலை 8.40 மணி அளவில் கடப்பாவிலிருந்து கர்நாடக மாநிலம் பிஜாபூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று கடக்க முயன்றுள்ளது.

முதலில் ஆர் டி சி பேருந்து ஒன்று மெதுவாக அந்த பாலத்தைக் கடந்து செல்ல, இந்த காரும் ஆபத்தை உணராமல் பின்னால் சென்றுள்ளது. ஆனால் பேருந்து பாலத்தைக் கடந்து விடவே காரால், வெள்ளத்தை எதிர்த்துக் கடந்து செல்ல முடியவில்லை. ஒருகட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி கார் அடித்து செல்லப்பட்டது.

இதில் ராகேஷ் மற்றும் யூசஃப் ஆகிய 2 பேர் பயணித்துள்ளனர். நல்வாய்ப்பாக ஆற்றின் அப்பகுதி ஆழம் இல்லாமல் இருந்ததால் உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டனர். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடவே தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

-கவிபிரியா

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon