இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் பண்டிகை ஆகஸ்டு 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில்... கொரோனா தொற்று பரவும் சூழலில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொதுவெளியில் நகர்புற பகுதிகளில் அரசு அறுப்புக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் விலங்குகளை அறுப்பதை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “பக்ரீத்துக்காக ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன. அப்போது உரிய விதிகள் பின்பற்றப்படாமல் விலங்குகள் வதை செய்யப்படுகின்றன. எனவே விலங்குகள் பலியிட தடை விதிக்கவேண்டும். பொது இடங்களில் விலங்குகளை கொல்வதற்கு தடை விதித்து கடந்த ஜூன் 20ம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநில அரசும் பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்” என்று மனுதாரர் கோரிக்கை வைத்தார்.
நேற்று (ஜூலை 30) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்க, “இந்த மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என கோரினார். ஆனால் நீதிபதிகளோ, “பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்” என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர். இதையடுத்து சென்னை மாநகருக்குள் பக்ரீத் பண்டிகையை ஒட்டி விலங்குகளை பலியிடக் கூடாது என்று மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
பக்ரீத் வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகவில்லை ஏன்?
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, “முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் அமைப்பு தொடுத்த வழக்கில் நகர்புற பகுதிகளில் அரசு அறுப்புக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் பிராணிகளை அறுப்பதை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் தலைமை இயக்குநர் உள்ளிட்ட எட்டு அரசுத்துறை அமைப்புகள் எதிர் தரப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தும் கூட பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அரசு தலைமை தலைமை வழக்கறிஞர் (Advocate General) ஏன் ஆஜராகவில்லை என்ற முக்கிய கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும். விலங்கு வதைத் தடை சட்டத்தின் 28ம் பிரிவு மிகத் தெளிவாக அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் மத ரீதியான விலங்கு பலிகளுக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டிருந்த போதினும் அதனை கவனத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் தீர்ப்பல்ல
ஒரு வட இந்திய சங்கம் தொடுத்துள்ள இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு முஸ்லிம்களை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. வடவர்களின் நம்பிக்கைகளை தமிழக மக்கள் மீது திணிக்கும் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை திருத்துவதற்கு உடனடியாக தமிழக அரசு தகுந்த சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஜவாஹிருல்லா.
ஒரு சாராரின் வாதமே கேட்கப்பட்டுள்ளதா?
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை வட இந்தியர் சங்கத்தின் தலைவர் ஹூக்கும் சிங் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்படாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960- ஐ சுட்டிக்காட்டியும் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ள நீதிமன்றம், அதே சட்டத்தின் பிரிவு 28, மதரீதியான நிகழ்வுகளுக்கு, நம்பிக்கைகளுக்கு விலங்குகளை பலியிடுவதை தடை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளாமலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகவே, இந்த தீர்ப்பு ஒரு சாராரின் வாதத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு, இன்னொரு சாராரின் கருத்தை கேட்காமலேயே வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
ஆகவே, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் வகையிலும், சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நாளை மறுதினம் கொண்டாடப்படும் பக்ரீத் தினத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கை பிரகாரம் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடும் நிகழ்வுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சியும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:” என்று குறிப்பிட்டுள்ளார்.
-வேந்தன்