மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - முழு பார்வை

சிறப்புக் கட்டுரை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை - முழு பார்வைவெற்றிநடை போடும் தமிழகம்

-

பேராசிரியர் நா.மணி

வனம் அல்லது காடு என்றால் உடனடியாக நம் நினைவுக்கு வருவது என்ன? அதிகபட்சம் மலைகள், வன விலங்குகள் எனப் பொதுவாக வைத்துக்கொள்ளலாம். சிலருக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலருக்கோ வீரப்பனுக்குப் பிறகு காடுகள் அழிக்கப்பட்டு அவை தோட்டங்கள், ரியல் எஸ்டேட்களாக மாறி வருவது நினைவுக்கு வரும்.

வனம் என்றால் என்ன?

உண்மையில் வனம் என்றால் என்ன? வனத் துறை அமைச்சகம் என்றால் என்ன? வனங்களில் உள்ள நுண்ணியிரிகள் முதல் பேருயிரிகள் வரையான ஜீவராசிகள். தாவர வளங்கள், மர வளங்கள், மலைகள், சிகரங்கள் மலைகளில் உருவாகும் ஆறுகள், மாங்குரோவ் காடுகள், பவளப் பாறைகள், அனைத்து வகை பல்லுயிரியம், உயிர் கோளத்தில் உள்ள வளங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சதுப்பு நிலங்கள், பருவகால மாற்றம், அதன் மேலாண்மை, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கோவையில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மாசுக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இவையெல்லாம் இணைந்தே இந்திய நாட்டின் வனம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்.

சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த ஒப்பந்தங்கள் போன்றவற்றை பாதுகாப்பதும்கூட இந்த அமைச்சகத்தின் பணியே. அமைச்சகங்களில் மிக மிக முக்கியமான அமைச்சகம். இந்த மண்ணில் மக்கள் உள்ள வரை இங்கு இருக்கும் வளங்களைப் பாதுகாக்கும் அமைச்சகம். பொதுவாக அனைத்து வகையான இயற்கை வளங்களின் பாதுகாவலன் இந்தத் துறை. இயற்கை வளங்கள் எத்தனை காலம் இந்த நாட்டில் நீடித்து நிலைத்து இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்வதும் இந்தத் துறைதான். இயற்கை வளங்கள் பயன்பாட்டின்போது வேளாண்மை சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், மக்கள் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிடுதல், அவற்றை தடுத்து நிறுத்துதல், தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரும்போது அதற்கு நிவாரணம் அளித்தல், அதற்கான வழிமுறைகளைக் காணுதல் ஆகியவையும் இத்துறையின் பொறுப்பில்தான் வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளார்களா?

ஏன் இந்தத் துறை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? பொருள் உற்பத்தியின் ஆதார சுருதியான பல இயற்கை வளங்கள் இந்தத் துறையின் பொறுப்பில் இருக்கிறது. இந்தத் துறை கீழ் வரும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் (Environmental impact assessment) திருத்தங்களை ஒட்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளது. ஒருவகையில் கொந்தளிப்புகள் என்று கூறினாலும் தவறில்ல. அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறைகளை உருவாக்க காரணமாக அமைகிறது. ஆனால், அந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் திருத்தங்கள் அமைந்துள்ளது என்பது ஒரு நகைமுரண்.

முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன, அதன் செயல்முறைகள் என்ன என்பதையும் பின்னர் 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள் குறித்தும் பார்ப்போம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?

வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும்போது அவை ஏதேனும் ஒருவகையில் சுற்றுச்சூழல் மீதும் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. இந்தத் தாக்கத்தை மதிப்பீடு செய்து வளர்ச்சி திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் எத்தகையது? யார் யார் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? அதையொட்டி திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்தல், ஒருவேளை திட்டத்தின் பாதிப்புகள் சரிசெய்ய இயலாத பாதிப்புகளை மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் எனில் அந்தத் திட்டத்தை கைவிடுதல் ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழு செய்ய வேண்டிய பணிகள் ஆகும்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வின் பல்வேறு நிலைகள்:

முதலில் ஒரு வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் அதற்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு தேவையா, இல்லையா என்று முடிவு செய்வார்கள். அப்போது அந்தத் திட்டங்கள் ஏ ,பி1, பி2 என்று வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஏ என்பது மிகப் பெரிய திட்டம். பி1 அதைவிட சிறிய திட்டம் எனத் தரவரிசை செய்யப்படும். இரண்டாம் நிலையில் இந்தத் திட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள், அவை சூழல் மண்டலத்தில் ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள், அதற்கு தேவைப்படும் ஆய்வுகள் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது. மூன்றாவது நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அடையாளம் காணப்படும். மதிப்பீடு செய்யப்படும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமா, வளர்ச்சி திட்டத்தால் நன்மை அதிகமா... வளர்ச்சி திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு என்ன நிவாரணம் என்பதெல்லாம் கணக்கீடு செய்யப்படும்.

நான்காவதாக அந்தத் திட்டத்தின் மீது, திட்டம் அமலாக்கம் நடைபெற உள்ள பகுதி மக்கள் மத்தியிலும் சூழலியல் வல்லுநர்கள் மத்தியிலும் பொதுக் கருத்து கேட்கப்படும். இறுதியில் மேற்படி நான்கு அம்சங்களையும் கருத்தில்கொண்டு அந்த வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா, கூடாதா என்ற இறுதி முடிவை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகும்கூட திட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட பின்னர் விதிமுறைகள் நிபந்தனைகள் சரியாக அமலாக்கம் செய்யப்படுகிறதா ஆராயவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய வழிமுறை 1970களில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1990களின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகள் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, நடைமுறைப்படுத்தப்பட உள்ள வளர்ச்சி திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் இதய சுத்தியோடும் வெளிப்படைத் தன்மையோடும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் ஜனநாயக பூர்வமாகச் செயல்பாட்டால் வளர்ச்சி திட்டங்கள் வழி உருவாகும் வலிகளை தடுக்க, தவிர்க்க, குறைக்கப் பயன்படும். சுற்றுச்சூழல் சட்டங்கள் எந்த அளவுக்கு கறாராக அமலாக்கம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது நாம் அனைவரும் கண்கூடாக கண்டது. சிறிய தளர்வுகளும் பெரிய பாதிப்புகளை அதுவும் சரி செய்ய இயலாத பாதிப்புகளை உருவாக்கும். பொருளாதார வளர்ச்சி அவசியம். மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதற்கு என்ன விலை கொடுப்பது? சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எவ்வளவு சமரசம் செய்ய இயலும்? எவ்வளவு சுற்றுச்சூழல் இழப்பு என்பதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம்? மக்களின் வாழ்வாதாரத்தையும் எவ்வளவு தூரம் அதற்கு பணயம் வைக்க போகின்றோம்? கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியுமா? வளர்ச்சி யாருக்காக? வளர்ச்சியை என்ன விலை கொடுத்து வாங்குவது?

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

கட்டுரையாளர் குறிப்பு:

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவர். Environment climate change and disaster management என்ற நூலின் ஆசிரியர்.

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon